ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளும், 13 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமிகளும் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். மற்றொரு சிறுமி அவர்களின் உறவுக்காரர் ஆவார். மேலும் இந்த விபத்தில் 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.