ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.
“இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்த வழிவகை செய்துள்ளது. அதே போல், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள் அங்கு முறையான உதவிகள் வழங்கப்படுவதில்லை, எனவே அமெரிக்கா வருவதை தவிர்க்கமாறு தற்போது முகாம்களில் உள்ள அகதிகளை எச்சரிப்பதாகக் கூறப்படுகின்றது. இதையே தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.
2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில்
தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்’ என முழுமையாக நிராகரித்து வருகின்றது.
அந்த வகையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் படகு வழியே வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளை பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.