சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை!

சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது.

இதுகுறித்தான அறிவிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நகரிலிருந்து வருபவர்கள் இரு வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு மூத்த மருத்துவ ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எடுக்கப்பட்டது” என்றார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நால்வர் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், சீனாவுக்கு யாரும் பயணிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா முன்னரே தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.