உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆபத்தான வைரஸ் நோய்கள், 2002-ல் சீனாவில் சார்ஸ், 2009-ல் உலகில் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல், 2014-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016-ல் பிரேசிலில் ஜிகா, 2019-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் ஆகியவை. இந்த வரிசையில் 2020-ல் சீனாவில் கரோனா வைரஸ்!
உலகில் உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நாட்டில் மக்கள்தொகை பெருகினால், சுத்தமும் சுகாதாரமும் குறைந்தால், சுற்றுச்சூழல் கெட்டுப்போனால், மக்களுக்கு உணவு விஷயத்தில் அக்கறை இல்லாவிட்டால், தடுப்பூசி உள்ளிட்ட நோய்த்தடுப்பு முறைகளில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால், அது எத்தனை வளர்ச்சிபெற்ற நாடாக இருந்தாலும், அங்கே புதிது புதிதாக நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்பதை எச்சரிக்கும் அலாரங்கள் இவை.
கரோனா வைரஸ் – புதிய ஆபத்து!
கடந்த டிசம்பர் மாதக் கடைசியில், மத்திய சீனாவில் வூஹான் நகரத்தில் கரோனா எனும் வைரஸ் பரவுவதாக முதல் செய்தி வந்தபோது, உலக சுகாதார நிறுவனம் உட்பட எல்லா நாடுகளும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டன. அடுத்த ஒரு வாரத்தில், அசுர வேகத்தில் பரவிய கரோனா, இன்று வரை 100-க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிவிட்டது. இது தெரிந்ததும் உலக நாடுகள் எச்சரிக்கை அடைந்தன. ஏற்கெனவே, 2002-ல் சார்ஸ் நோய் வந்தபோது 700-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனதை சீனா இன்னும் மறக்கவில்லை. கரோனாவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா பல வழிகளில் முயற்சித்தாலும் இதுவரை வூஹான் நகரத்தில் மட்டும் சுமார் 3,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் பல பகுதிகளுக்கும் 10-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவிவிட்டது. சர்வதேச அளவில் ஒரு மருத்துவ அவசரநிலைப் பிரகடனம் செய்ய வேண்டி வருமோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிட்டது கரோனா.
ஏற்கெனவே, 6 வகையான வைரஸ்களைக் கொண்டது, கரோனா வைரஸ் குடும்பம். இதில் 7-வதாகப் பிறந்துள்ளது இப்போது முதல் முறையாக சீனாவில் பரவிவரும் ‘நாவல் கரோனா வைரஸ்’ (2019nCoV). இந்த வைரஸ் வகைகள் பெரும்பாலும் வீட்டு விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள், மீன், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் மூலமே மற்றவர்களுக்குப் பரவும். சீனாவில் அறியப்பட்ட முதல் கரோனா காய்ச்சல், நோயாளி மீன் சந்தைக்குச் சென்று வந்தவர் என்பதிலிருந்தே இது உறுதியாகிறது. நோயுள்ள மனிதரிடமிருந்தும் இது பரவலாம் எனத் தெரிகிறது. இந்த வைரஸ்கள் சாதாரண ஜலதோஷத்திலிருந்து உயிரைப் பறிக்கும் ‘சார்ஸ்’ வரை அநேக நோய்களை நமக்கு அழைத்துவரும் கொடூரம் கொண்டவை. ஆனாலும், இப்போதைய கரோனா, ‘சார்ஸ்’ அளவுக்கு மிகவும் கடுமையான வைரஸ் இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
என்னென்ன அறிகுறிகள் தெரியும்?
கரோனா காய்ச்சல் சாதாரண ஃபுளூ காய்ச்சலைப் போலவே தொடங்கும். வறட்டு இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நிமோனியா நோயின் தாக்கம் தெரியும். மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகும், சளியில் ரத்தம் வெளியேறும். நெஞ்சுவலி வரும். சுவாசக் கோளாறு அதிகமாகும்போது இது பன்றிக் காய்ச்சலை ஒத்திருக்கும். அப்போதுதான் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய் உள்ளவர்கள் ஆகியோர்தான் இதற்குப் பலியாகிறார்கள். ஆகவே, இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் மிகச் சாதாரணமாக இருப்பதால், இதைத் தொடக்கத்திலேயே துல்லியமாகக் கணிப்பது கடினம். எலிசா, பிசிஆர், வைரஸ் கல்ச்சர் ஆகிய ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சளி பரிசோதனைகள் மூலம் இந்தக் கிருமியை அறியலாம். இந்தியாவில் இந்தக் காய்ச்சல் பரவினால், புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்தில் நூறு சதவீதம் உறுதிசெய்ய முடியும்.
என்ன சிகிச்சை?
கரோனா காய்ச்சல் இப்போதுதான் புதிதாக வந்துள்ளது என்பதால், இதற்கு அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை, மருந்து, ஊசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குத் தடுப்பூசியும் இல்லை. எனவே, இப்போதைக்குக் காய்ச்சலைக் குறைக்க மருந்துகள் தருகிறார்கள். உடலின் திரவங்கள் குறைந்து நீர் வறட்சி ஏற்பட்டால், குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள். நோயாளியின் ரத்த அழுத்தம் சீராக இருக்க சலைன் ஏற்றுகிறார்கள்; மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்துகிறார்கள். ஆக்ஸிஜன் செலுத்துகிறார்கள். பிற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைத் தருகிறார்கள்.
தப்பிப்பது எப்படி?
இந்த நோய் பரவும்போது மீன், முட்டை மற்றும் இறைச்சிகளைச் சாப்பிட வேண்டாம். மீன்/இறைச்சி விற்கப்படும் இடங்களையும் விலங்குகள் உள்ள இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்த நோய்த்தொற்று இருப்பவருடன் கை குலுக்கக் கூடாது. இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது. கைகளையும் கால்களையும் நன்றாக சோப்புத் தேய்த்துத் தண்ணீரில் கழுவ வேண்டும். பகலில் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது மூன்றடுக்கு முகக்கவசம் அல்லது ‘என்95’ ரக முகக்கவசம் அணியுங்கள். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
காய்ச்சலுக்கு சுய மருத்துவம் வேண்டாம். உடனே மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். இந்த நோய் பரவும் இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம். மேலும், இந்த நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் சாதாரண உடையில் சிகிச்சை தரக் கூடாது. இவர்கள் கையுறைகள், முகக் கவசம், உடலை மூடும் உடைகள், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிக அவசியம். அப்போதுதான் இந்த வைரஸ் இவர்களுக்கும் பரவாது; இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவாது. சீனாவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் உயிரிழந்ததுதான் இந்த எச்சரிக்கைக்குக் காரணம்.
– கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com