தம் உயிரை பணயம் வைத்துள்ள சீன வைத்தியர்கள்!

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சீனாவில் இருக்கும் பிற நாட்டு மக்களை மீட்பதற்காக அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்தியாவிலிருந்து சீனா சென்ற சிறப்பு விமானம் 300-க்கும் அதிகமான இந்திய மக்களை வெற்றிகரமாகத் தாயகம் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

வுகான் நகரம் முழுவதும் மயான அமைதியாகக் காணப்படுகிறதோடு, ஆள் நடமாற்றமற்று, வீதியொங்கும் வெறிச்சோடி காணப்படுகின்றது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். போக்குவரத்து, கடைகள், விற்பனை போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீதியில் சுற்றித் திரியும் ஓரிரு மக்களும் முகமூடி அணிந்துகொண்டு நடக்கின்றனர். வுகான் நகரம் முழுவதும் பள்ளி, அலுவலகம் போன்ற அனைத்துக்கும் காலவரையின்றிப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வைத்தியக் குழுக்கள் வுகான் நகருக்குச் செல்கிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கும் எப்போதுவேண்டுமானாலும் இந்த வைரஸ் தொற்று ஏற்படலாம். எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே வைத்தியர்கள் செல்கின்றனர். தங்களின் அன்பிற்குரியவர்கள் திரும்ப வரப்போவதில்லை எனத் தெரிந்தே அவர்களின் உறவினர்கள் வைத்தியர்களை வழியனுப்பிவைக்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கண்ணீர் வரவழைப்பதாக உள்ளன.

இந்நிலையில் தற்போது சீன வைத்தியர்கள் செல்லும் இந்தப் பயணத்தை செர்னோபில் அணு உலை விபத்தில் பணியாற்றிய வீரர்களுடன் ஒப்பிட்டும் பேசப்படுகின்றனர். இவ்வைத்தியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற நோயாளிகளைக் காப்பதற்காகச் செல்கிறார்கள். பிறரின் உயிரைக் காக்கச் செல்லும் வைத்தியர்களுக்கும் அவர்களை வழியனுப்பிவைக்கும் உறவினர்களுக்கும் பாராட்டுகளுக்கும் அனுதாபங்களும் குவிந்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.