பாதுகாப்பு விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்பவர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதன் மூலம், கடந்த ஆறு மாதத்தில் 1,730 பேரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையும் உள்துறையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் அல்லது சர்வதேச விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2018- 19 நிதியாண்டில், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 387 பேர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில், 205 பேர் மட்டுமே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது, தற்போதைய நிலையில் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை 89 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
அதே போல், 2018-19 நிதியாண்டில் ஆஸ்திரேலிய எல்லைப்படையின் அறிவுறுத்தலின் படி 1,343 பேர் விமானங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுவே, அதற்கு முந்தைய ஆண்டு 555 பேர் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தை பலர் தவறாக பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையை தற்காலிகமாக நிர்வகித்து வரும் அலன் துஜ்.
இந்த சூழலில், மலேசியா மற்றும் சீனாவிலிருந்து பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். இதுமட்டுமின்றி வியாட்நாம், இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
தற்போதைய சூழலில், பாதுகாப்பு விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்பவர்களில் ஈரான், ஈராக், துருக்கி, மலேசிய ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதன்மையான நிலையில் இருக்கின்றனர்.