உள்நாட்டுப்போரில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் ‘ குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார். இது பற்றி நியூயோர்க் ரைம்ஸ், பி.பி.சி., த ரெலிகிராவ் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு இது வரையில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அதிகாரப்பரவலாக்கம் பற்றி ஆராய விரும்புகின்றேன்.
(1) பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் எதிர்ப்பதன் காரணத்தினால் அதிகாரப்பரவலாக்கம் சாத்தியம் இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.
(2) அது உண்மையில் சரியானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தவிதமான அதிகாரப்பரவலாக்கத்தையும் வழங்குவதை சிங்களவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதுவே உண்மை. அதற்கு முகங்கொடுப்போம்.
(3) அதிகாரப்பரவலாக்கம் சாத்தியமில்லை என்று கோத்தாபய ;கூறிய பாங்கில் உட்பொருள் ஒன்று இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அவர் கூடுதலான அளவுக்கு விட்டுக்கொடுத்துச் செயற்படத் தயாராயிருக்கிறார். ஆனால், சமகால அதிகாரத் தொடர்புகள் அவரது கைகளைக் கட்டிப்போட்டிருக்கின்றன.
(4) இதற்கு வரலாற்றில் முன்னுதாரணங்கள் உண்டு. பண்டாரநாயக்கவும் டட்லியும் செல்வநாயகத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை வெவ்வேறு காலகட்டங்களில் கிழித்தெறியவேண்டியிருந்தது.சிங்கள பேரினவாதிகளும் பிக்குமாரும் கிளர்ந்தெழுந்தபோது இருவரும் அடிபணிந்தார்கள்.
இந்த நான்கு அம்சங்களும் சரியானவை என்றால், கோத்தாபய ராஜபக்ஷ செய்யவேண்டிய பொருத்தமான காரியம் என்ன? அவர் பாறையில் தனது தலையை மோதி தன்னை நிர்மூலம் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது ; எதிர்பார்க்கவும் கூடாது.அதேவேளை, அவர் எதையும் செய்யாமல் விடுவதும் தவறானதாகும். எனவே இந்தச் சீரழிவை வெற்றிகொள்வதற்கு எவ்வாறு அவர் தன்னைத் தயார்படுத்தவேண்டும்? இதே போன்ற தார்மீகச் சவால்களை எதிர்கொண்ட வேறு தலைவர்கள் எவ்வாறு தமது பிரதிபலிப்பை வெளிக்காட்டினார்கள்?
மூன்று தலைவர்கள் எனது நினைவுக்கு வருகிறார்கள் ஏபிரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா ஆகியோர் அதிவிசேடமான மேன்மையுடைய மாமனிதர்கள்.அதுவே அவர்களை முக்கியமானவர்களாக்கியது. மூவரும் போராட உறுதிபூண்டதுடன் தங்களது மக்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பினார்கள்.தலைவர்கள் எனப்படுவோர் தலைமை தாங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தால், தங்களு மக்களுக்கு முன்னால் நிற்கவேண்டும். வாலைச்சுருட்டிக் கொள்வது தலைமைத்துவத்துக்கான பண்பு இல்லை. கோத்தாபய ஒரு பெரும் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது, ஆனால் அதற்குரிய தார்மீக வல்லமை அவரிடம் இருக்கிறதா?
ஐக்கியத்தை பேணிக்காக்கவும் அடிமைமுறையை ஒழிக்கவும் லிங்கன் மிக நீண்டதும் கடுமையானதுமான போராட்டத்தை நடத்தினார். அவரது முதன்மையான இலக்கு ஐக்கியத்தைப் பேணுவதாகும்.ஆனால், அதற்காக அவர் அடிமைமுறை ஒழிப்புக்கான போராட்டத்தை ஒருபோது கைவிடவில்லை. காந்தியைப் பொறுத்தவரை, முஸ்லிம்களையும் பின்தங்கிய சாதிகளையும் அந்நியப்படுத்திய சில தவறான நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் ஈடுபட்டபோதுலும், 1930 களின் பிற்கூறில் முழுமையான மேன்மை கொண்டவராக உயர்ந்து வேறு எந்த இந்துத் தலைவரையும் போலன்றி முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தார்.இறுதியில் காந்தி, அம்பேத்காரைப் போன்று பின்தங்கிய சாதிகளுடனேயே கூடுதலாக அடையாளப்படுத்தப்பட்டார்.
கல்கத்தா கலவரத்தை பிரிட்டிஷ் இராணுவத்தினால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால், காந்தி தன்னந்தனியனாக அந்த கலவரத்தை நிறுத்தினார்.அவரை மவுண்ட்பேட்டன் ” தனிமனித இராணுவம் ” ( One – man army ) என்று அழைத்தார்.இறுதியில் லிங்கனும் காந்தியும் உச்சவிலையைச் செலுத்தினார்கள்.
கோதாபய மேன்மையான ஒரு தலைவராகுவதற்கு விரும்பினால், நல்லிணக்கத்தையும் சமூக ஒருமைப்பாட்டையும் கொண்டுவர தனது சுமார் எழுபது இலட்சம் வாக்காளர்களுக்கும் அறிவூட்டுவதற்கு கடுமையான இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும்.தார்மீக கடப்பாட்டுக்கு மேலதிகமாக அவரிடம் தந்திரோபாய ஞானம் இருக்கவேண்டியதும் அவசியம்.
நான் முன்னுதாரணமாக குறிப்பிட்ட தலைவர்களில் காந்தியே மிகவும் துரதிர்ஷ்டசாலி ; இந்தியப் பிரிவினையை அவரால் தடுக்கமுடியவில்லை.மண்டேலா அதிர்ஷ்டசாலி ; விட்டுக்கொடு்ப்பு உணர்வுடன் தனது மக்களை வழிநடத்தியபோது கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத்தாக்கவில்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால், அதிகாரப்பரவலாக்கம் சரியானதே என்று சிங்கள — பௌத்த மக்களுக்கு போதிப்பதற்கு கோதாபய எதையாவது செய்கிறார் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. மியன்மாரின் ஆங் சான் சூ கீயைப்போன்று கோதாபயவும் இறுதியில் ஒதுக்கப்படும் நிலையே கவலைக்குரிய முறையில் ஏற்படும.
இனிமேல் கோத்தாபய ;தூக்கிப்பாட்ட குண்டுக்கு வருவோம். உள்நாட்டுப்போரில் சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற மதிப்பீடு நம்பகமானது என்று நான் கருதுகிறேன். குறிப்பிடத்தக்க அளவுக்கு சர்ச்சைக்குரிய இந்த அறிவிப்பைச் ; செய்வதற்கு முன்னதாக ; உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை இயன்றளவுக்கு அவர் ஒன்றிணைத்துப் பார்த்திருக்கவேண்டும்.
முன்னைய சகல அரசாங்கங்களும் வெளிப்படையாகவே பொய்யைக் கூறியிருந்த நிலையில், கோத்தாபய ;எவரும் எதிர்பாராத வகையில் ஏன் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய இந்த தொகையை கூறுவதற்கு முன்வந்தார்?
உண்மையை ஒத்துக்கொண்டு, பாராதூரமான முறைகேடுகளுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளுக்கு மன்னிப்பு வழங்கி, கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச்சான்று பத்திரங்களை வழங்கி கடந்த காலத்தை மறந்துவிட அவர் விரும்புகிறாரா? அல்லது அதற்கும் அப்பால் நோக்கி தமிழர்களுடன் தகராறுகளுக்கு முடிவுகட்டி புதிய இணக்கத் தீர்வுக்கான பாதையை ஏற்படுத்துகிறாரா? இது தான் உண்மையென்றால், பொதுநன்மைக்காக தியாகங்களைச் செய்வதற்கு அவர் தன்னைத் தயார்படுத்தவேண்டியிருக்கும்.
இனவாத தீவிரவாதிகளுடனும் வெறுப்புப் பித்துப்பிடித்த பிக்குமார்களுடனும் முட்டிமோதுவதற்கு அவர் தயாராயிருக் கிறாரா? இது அடுத்த தேர்தலில் தனது வாக்குவங்கியை பலவீனப்படுத்தும் என்பதை அவர் விளங்கிக்கொள்கிறாரா?
கோத்தாபயவிடம் பிரகடனம் செய்யப்பட்ட கொள்கையொன்று கிடையாது.எந்தவொரு அரசியல் கோட்பாட்டையும் அவர் தன்னுடன் வரித்துக்கொண்டவருமில்லை.நடைமுறைச்சாத்திய அணுகுமுறையே தனது அளவுகோல் என்ற எண்ணத்தில் செயற்படும் அவர் எதை நோக்கிப் போகிறார் என்பதை நாம் அனுமானித்துப்பார்க்கவேண்டியிருக்கிறது.
இனவாதி என்றோ சர்வாதிகாரி என்றோ கோத்தாபயவுக்கு ஒரேயடியாக முத்திரை குத்துவதை விடவும் மேற்கூறப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் அவரது ஜனாதிபதி பதவி எவ்வாறு படிமுறை வளர்ச்சியடையும் என்று மதிப்பிடுவது நல்லது என்பது இப்போது எனது அபிப்பிராயம்.அதனால், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் கிடைக்காமல் செய்து ” பலம்பொருந்திய நிறைவேற்று அதிகாரத்தை ” தடுத்துநிறுத்தவேண்டியது முக்கியமானதாகும்.
நீரூபிக்கப்பட்ட ஜனநாயக சான்றாதாரங்களைக் கொண்டிராத ஒரு நடைமுறைச்சாத்தியவாதியின் கையில் எதேச் சாதிகாரம் ஆபத்தான ஒரு கருவியாகும். வருங்காலத்தில் அதிகாரத்துக்கு வரக்கூடிய மிகவும் கெடுதியான பேர்வழிகளின் கைகளையும் அத்தகைய ஆபத்தான ஆயுதம் சென்றுவிடாதிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் வெறுப்புக்குரியதே, ஆனால் சாத்தியமான மாற்று எதுவும் இல்லாத நிலையில் அது ஒரளவுக்கு நல்லதே.
குமார் டேவிட்