இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் குறிப்பாக சீனப் பிரஜைகளால் வைரஸ் பரவாமல் தடுக்க புதிய மென்பொருள் மூலாக அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது இதனை சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்குள் ‘ICTA’ உடன் இணைந்து வைத்தியர்கள் குழு ஒன்று இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது என்றும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடங்களின் விவரங்கள் மென்பொருளால் கண்காணிக்கப்படும் என்றும் ஜயசிங்க கூறினார்.
விமான நிலையத்தை வந்தடையும் சுற்றுலாப் பயணிகளின் சோதனையை தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட இரண்டு வாரங்கள் எடுத்துள்ளதனால் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு, பலாலி விமான நிலையங்கள், மற்றும் துறைமுகங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு சூழ் நிலைக்கும் முகங்கொடுக்க 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Eelamurasu Australia Online News Portal