அவுஸ்திரேலிய காட்டுத் தீ ! கான்பராவில் அவசர காலநிலை பிரகடனம்!

அவுஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கான்பராவில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயாக இதனை தெரிவித்துள்ளனர். இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய பிரதேசத்தில் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

2003 ஆம் ஆண்டில், கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 500 பேர் காயமடைந்தனர் மற்றும் 470 வீடுகள் அழிந்தன. இதேபோன்ற மேலும் ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத் தீக்கு முகங்கொடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.