விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது. அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு தான் அதனைச் செய்து வந்தோம்.
இன்று எமது பலம் மௌனிக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் தேசிய இனங்கள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் தென்னிலங்கை ஆட்சி பீடத்தை அமைக்க முடியும் என கருதி வந்தார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளால் குறித்த நிலைப்பாடு தகர்க்கப்பட்டது.
சிங்கள மக்கள் வழங்கிய வாக்குகளை விட தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வழங்கிய வாக்குகளால் இன்று புதிய ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிறுபான்மை இனத்தினுடைய பலத்தினை தென்னிலங்கை புரிந்து கொண்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவினால் எமது தேசிய இனங்கள் நசுக்கப்பட்டன. பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை பிரித்தது போன்று இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்க கூடாது என்பதற்காக சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சூழலிலேயே இன்று பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களின் நலன் சார்ந்தே செயற்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வானது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பலத்தினை ஏற்படுத்தியது.
தமிழ் மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அரசுக்கு எடுத்து கூறும் வகையில் குறித்த நிகழ்வு அமைந்திருந்தது. எனவே நாம் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.