முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும் ;கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம். எனினும் நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதைத் தடுப்பதற்கு ;நாம் ; உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மக்கள் சுத்தமாக இருப்பதுடன் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கின்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரத்தியேக செவ்வியிலேயே ; அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிய ; விடயங்கள் குறித்தும் நாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவுடன் கலந்துரையாடினோம்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு
கேள்வி:- கொரோனா வைரஸ் என்றால் என்ன? அது எங்கிருந்து மனிதனை தாக்கியது?
பதில் : கொரோனா எனப்படும் இந்த வைரஸ் மிருகங்களிலிருந்து வருகின்றது ; அவை சில சந்தர்ப்பங்களில் மனித உடலுக்குள் செல்கின்றன. அதாவது, சில வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் மேர்ஸ் என்ற ஒரு வைரஸ் ஒட்டகத்தின் ஊடாக மனிதர்களின் உடம்புக்குள் வந்தது. இவ்வாறு ; வைரஸ்கள் வருகின்றன.
பொதுவாக ; மிருகங்களிலிருந்து இவ்வாறான வைரஸ்கள் மனித உடலுக்குள் வருகின்றன. ஆனால், இம்முறை சீனாவில் முதலில் விலங்கிலிருந்து மனித உடலுக்கு வந்துள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதனிலிருந்து மனிதனின் உடலுக்கு வரும் நிலைமையை காண்கின்றோம் .
கேள்வி: எவ்வாறு கொரோனா வைரஸ் ஒரு மனிதனின் உடலிலிருந்து மற்றுமொரு உடலுக்கு தொற்றுகின்றது?
பதில் – அதாவது, இந்த கொரோனா வைரஸானது ; உமிழ்நீர் (எச்சில்) சுவாசக் காற்று என்பனவற்றின் ஊடாக ஒரு மனிதனின் உடலிலிருந்து ; மற்றுமொரு உடலுக்கு செல்கின்றது. அதேபோன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பின் அவர் இருக்கும் இடத்தில் உள்ள பொருட்களில் ; அவருடைய ; உமிழ் நீர் படியலாம். அந்த பொருட்களில் குறுகிய நேரத்தில் வேறொருவர் கையை வைத்துவிட்டு பின்னர் கையை வாய் மற்றும் மூக்கில் வைக்கும்போது வைரஸ் நோய் பரவலாம்.
கேள்வி: கொரோனா வைரஸ் நோய்க்கு மக்கள் ஏன் பயப்பட வேண்டும்?
பதில்:- இந்த வைரஸ் சர்வதேச ரீதியில் தொற்றுநோயாக பரவி வருகின்றமையால்தான் நாம் பயப்படவேண்டியுள்ளது. ; சீனாவில் தொடங்கி தற்போது15 நாடுகளுக்கு பரவியுள்ளது. மத்திய கிழக்கு நாடு ஒன்றிலும் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவில் ஆயிரக்கணக்கானோர் ; இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக ; சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினாலும் மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான ஒரு நோயை பரவ விடாமல் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது ; எமது முதன்மை கடமையாகும்.
ஆனால் இந்த கொரோனா வைரஸ் நோயானது பயங்கரமான நோய் அல்ல. இதனை உயிர்கொல்லி வைரஸ் என்று கூறுகின்றோம். ஆனால், சார்ஸ் மேர்ஸ் ; போன்ற வைரஸ் நோய்களுடன் பார்க்கையில் இந்த கொரோனா வைரஸானது பயங்கரமானதல்ல. நடுத்தர நிலைமையில் உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களை பார்த்தால் அவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்களாகவும் ; வேறு ஏதாவது ஒரு நோயை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர் சிறுநீரக நோய், மாரடைப்பு போன்ற வேறு நோய்கள் ; தாக்கியிருந்தவர்களே ; இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கேள்வி: எவ்வாறு இது தாக்குகின்றது?
பதில்: இந்த கொரோனா வைரஸ் நுரையீரலுக்கு சென்று ; நிமோனியாவை ஏற்படுத்துகின்றது. அதனூடாகவே தாக்கம் அதிகரிக்கின்றது.
கேள்வி: கொரோனா வைரஸ் பரவாமலிருக்க மக்கள் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?
பதில்: மக்கள் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் சுத்தத்தைப் பேணினால் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும். இலங்கையில் தற்போது இந்த ; வைரஸ் பாரியளவில் இல்லை. எனினும், ஒரு நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டார். இன்னும் சிலரிடம் இருக்கலாம் என்றும் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் கருதப்படுகின்றது
இந்நிலையில் இதனைத் தடுப்பதற்காக ;சுகாதாரத் துறையானது அரசாங்கத்துடன் இணைந்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றது. மக்கள் சமூகங்களில் வருகின்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதான ஊடகங்களின் ஊடாக அல்லது சுகாதார அமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் தகவல்களை ; மட்டும் பார்க்க வேண்டும். அவற்றையே நம்பி பின்பற்றுங்கள்.
கேள்வி: சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் எவ்வாறு?
பதில்:- சுத்தமாக இருப்பது என்பது கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுவது சிறந்ததாக அமையும். மக்களுடன் அருகில் சென்று கதைப்பதைத் தவிர்க்கவும். ஒரு மீற்றர் தூரத்திலிருந்து பேசுவதே நல்லது. ஒன்றுகூடல்களில் பங்கெடுப்பதை தவிர்ப்பது நல்லது. முடியுமாயின் அவற்றை பிற்போடலாம். கைகளால் அடிக்கடி ; முகம், வாய் மற்றும் மூக்கு என்பவற்றை தொடுவதை ; தவிர்க்கவும். உங்கள் சூழலிலுள்ள ஏதாவது ஒரு பொருளில் கைகளை வைத்தால் கைகளை ; சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும்.
எனினும், இந்த ஏற்பாடுகளினால் மக்களின் பொதுவான இயல்பு வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது. நாம் அந்த நிலைக்கு இன்னும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக ; மக்கள் தமது பணிகளில் ஈடுபடலாம் ; என்பதே ; உலக சுகாதார அமைப்பினதும் எமதும் ஆலோசனையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் இந்த கொரோனா வைரஸுக்கு மேலதிகமாக வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம். நாம் சுத்தமாக இருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை எம்மிடம் உள்ளது.
கேள்வி:- எனினும், மக்கள் இது தொடர்பில் அச்சத்தில் உள்ளனர்?
பதில்: சுகாதார அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பலாலி விமான நிலையத்திலும் இது நடைபெறுகின்றது. துறைமுகங்களிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. துறைமுகங்கள் ஊடாக வருகின்ற வெளிநாட்டவர்கள் குறித்தும் ;பரிசோதனை செய்யப்படுகின்றது.
விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எங்கே பயணிக்கின்றனர் என்பது ; தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். சுகாதார பரிசோதகர்கள் அவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சீன நாட்டவர்கள் அதிகம் பணியாற்றுகின்ற இடங்களை சென்று பார்வையிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கை ; மாணவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு ; ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதுடன் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். அதனால் பிரதான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக வருகின்ற திரிபுபடுத்தப்பட்ட தவறான தகவல்களை நம்ப வேண்டாம். ; அதனால் வீண் சிக்கலே ஏற்படும்.
மக்கள் சுத்தமாக இருப்பதுடன் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கின்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் ; இந்த கொரோனா வைரஸ் ; தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டியதில்லை
கேள்வி:- தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சீன பெண்ணின் நிலை எவ்வாறு உள்ளது?
பதில்:- நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று இது அதி பயங்கரமான நோய் அல்ல. ஆனால் சில நேரங்களில் மரணங்கள் சம்பவிக்கலாம். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட சீன நாட்டு பெண் ஐ.டி.எச். மருத்துவமனையில் ;சிகிச்சை பெறுகின்றார். அவரின் நிலை பயங்கரமானதாக இல்லை. அவர் விரைவாக குணமடைவார் என்று நம்புகின்றோம். அதுவும் எமது வெற்றியாக இருக்கும்.
கேள்வி:- தற்போதைய இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள போதுமான பெளதீக, மனித வளங்கள் உள்ளனவா?
பதில்: ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மேலதிகமாக 12 மருத்துவமனைகள் இதற்காக பிரத்தியேகமாக இயங்கிவருகின்றன. ஒரு மாகாணத்துக்கு ஒரு ; மருத்துவமனை என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ; மேல் மாகாணத்தில் கூடிய சனத்தொகை என்பதால் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அங்கு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் வருகின்றவர்களை பரிசோதிப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு வருகின்றவர்களில் 99 சதவீதமானோர் இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை. சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ; தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் என்று அவற்றை நாம் கூறுவோம். சுகாதார உத்தியோகத்தர்கள் அச்சம், சந்தேகமின்றி ; பணிகளில் ஈடுபடலாம்.
இராசாயன கூடம் மற்றும் ஏனைய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த வைரஸ் குறித்து பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். சோதனை உலகில் அனைத்து இடங்களிலும் இல்லை. இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் நொவேல் கொரோனா 2019 என்ற வைரஸ் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளது. ;எமது பிராந்தியத்தில் கொழும்பிலும் இந்தியாவின் புனே நகரில் மட்டும் இந்த முறைமை உள்ளது. தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
கேள்வி: – எவ்வளவு காலத்தில் இதற்கான மருந்தை அல்லது தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கலாம்?
பதில்: வைரஸ் ; தொடர்பில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது இலகுவான விடயமல்ல. ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தேவைப்படுகின்றது. ; எனவே, தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதே தற்போதைய தேவையாக உள்ளது. எமது சமூகத்துக்கு இது இன்னும் பாரியளவில் பரவவில்லை. நாம் அந்த நிலைமையை தொடர்ந்து பேணவேண்டும். அவ்வாறு செய்தால் ; இதனை அகற்றிவிடலாம்.
கேள்வி: இந்த வைரஸ் எவ்வாறு அழியும்?
பதில்: காலா காலத்துடனான காலநிலை உள்ளிட்ட காரணிகளால் அது அழிந்துவிடும். எனினும் மிருகங்களிடம் இந்த வைரஸ் இருக்கும். அவற்றிலிருந்து மக்களுக்கு வரலாம். மனிதருக்குள்ளும் மறைந்திருக்கலாம். எந்த நேரமும் நோய் நிலையை ஏற்படுத்தாது.
கேள்வி : முகக் கவசம் அணிய வேண்டுமா?
பதில் : சுகாதார அமைச்சு முகக் கவசம் அணியுமாறு மக்களை ;கோரவில்லை. அதேபோன்று முகக் கவசம் அணியவேண்டாம் என்றும் கூறமாட்டோம். சுத்தமாக இருப்பதே முக்கியமாகும். முகக் கவசம் அணியவேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ; அப்போது அவற்றை அணியலாம். ஒரு புற்றுநோயாளர் அணியவேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் ; முகக் கவசம் அணியவேண்டும். ஒரு நோயாளர் தனது நோய் மற்றுமொருவருக்கு செல்லாமல் தடுக்க முகக் கவசம் அணியலாம். ஒரு முகக் கவசத்தை இரண்டு நாட்கள் தொடர்ந்து அணிந்தால் ; வேறு நோய்கள் வரலாம்.
கேள்வி : ஒருவருக்கு தனக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?
பதில் : காய்ச்சல், இருமல், தடிமன் மற்றும் மூச்சுத் திணறல் போன்றன அறிகுறிகளாக உள்ளன. அவ்வாறு இருந்தால் வைத்தியரை நாட வேண்டும். தேவையான ஆலோசனைகள் வைத்தியரால் வழங்கப்படும்.
கேள்வி : காலை நேரங்களில் அதிக பனிமூட்டம் உள்ளது. ; அதனால் சாதாரணமாகவே காய்ச்சல், இருமல், தடிமன் போன்றன ஏற்படுமல்லவா?
பதில் : சுகயீனம் ஏற்பட்டால் மருத்துவரை நாட வேண்டும். எல்லோருக்கும் கொரோனா நோய் இருப்பதாக வைத்தியர் பார்க்கமாட்டார்.
கேள்வி : கொரோனா வைரஸ் ; இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட சீனப் பெண் சென்ற இடங்கள்?
பதில் -அவர் ; சீனப் பிரஜைகள் குழுவுடன் விஜயம் செய்திருக்கின்றார். அவர் சென்ற இடங்கள், தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு சென்று ஆலோசனைகள், வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி இந்தத் தொற்றுக்கு உள்ளான ஒருவருக்கு முதலில் வழங்கும் சிகிச்சைகள் என்ன?
பதில் -தனி அறையில் வைத்து ; சிகிச்சை அளிக்கப்படும். இதற்கென மருந்து இல்லை. நோய் அறிகுறிகளுக்கான மருந்துகளே வழங்கப்படும். குணமடைந்ததும் அனுப்பப்படுவார்.
கேள்வி -சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்கள்?
பதில் -வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை இன்னும் அழைத்துவர முடியவில்லை. காரணம் நோய்ப் பரவலைத் தடுக்க அந்த நகரம் மூடப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது இலங்கைக்கு வருவார்கள் என்று கூற முடியாது. ஆனால், அரசாங்கம் ; சீன அதிகாரிகளுடன் பேசிவருகின்றது. இந்த மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வந்ததுடன் ; 12 நாட்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும். காரணம் இந்த வைரஸ் 4 நாட்களிலிருந்து 14 நாட்களில் ;வெளிப்படலாம். அவர்களை அந்த காலப்பகுதியில் கண்காணிப்பது அவசியமாகும்.
கேள்வி- அச்சத்தில் உள்ள மக்களுக்கு உங்கள் செய்தி?
பதில்- இது முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும் ;கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம் எனினும், நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதை தடுப்பதற்கு ; நாம் உரிய வழிமுறைகளைப் ; பின்பற்றவேண்டியது அவசியமாகும். இந்த இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலையை ; ஆரோக்கியமானதாக மாற்றியமைக்க வேண்டும். பொறுப்புள்ள பிரஜைகளாக செயற்படுவது அவசியமாகும். சுத்தமாக இருத்தல் சுகாதார அமைச்சு வெளியிடும் அறிகவுரைகளைப் பின்பற்றுதல் என்பன முக்கியமாகும். அநாவசியமாக பயப்படவேண்டாம்.
– ரொபட் அன்டனி