இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்

சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய காவல்துறை அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.

அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர்.

குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதில் தயாவதியின் புகைப்படத்திற்கு பதிலாக ஆண் ஒருவரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது.

இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை திரும்பவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அனுப்பி வைத்து சரியான புகைப்படத்துடன் கூடிய அனுமதிப்பத்திரத்தை தயாவதி பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தில் வேகமாக வாகனத்தை செலுத்தியதாகத் தெரிவித்து அம்மாநில காவல்துறை இரண்டு தடவைகள் 300 மற்றும் 379 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் இஸ்ரேலில் இலத்திரனியல் சமிக்ஞைகளை உதாசீனம் செய்து வாகனம் செலுத்தியதாகவும் இதே சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை உடைய நபருக்கு எதிராக குற்றம் சுமத்தி அபராத அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து காவல்துறைக்கு அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தயாவதி தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டதனால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரும் தமது பெயரைக் கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தயாவதி குறிப்பிட்டுள்ளார்.