இளைஞர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

சில நாட்களுக்கு முன்பு, தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று, தாய் முடிவெட்டிவிடச் சொன்னதால், பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி செய்திகள் வெளியாகின. அதைப் பற்றிய தகவல்கள் மனதைப் பிய்த்தன: ‘கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்துகொண்டதால் தனி மரமானார்’. அந்தத் தாயின் துயரத்துக்கு நடுவே, இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மைகளும் முக்கியம்: இது தலைமுடி பற்றிய விஷயம் இல்லை. ஒரு முழு மனிதனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருந்த, தன் வாழ்வின் முடிவுகளைத் தானே எடுக்க விரும்பிய, அதற்கான வளர்ச்சிப் படியில் இருந்த ஒரு வளரிளம் பருவத்து உடல்.

வளரிளம் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பிளவும் பூசலும் புதிதில்லை. ஆனால், இன்றைய சூழலில் இவற்றின் விளைவுகள் ஆழமானவை. இவை பற்றிய அக்கறையும் உளவியல் ஆராய்ச்சிகளும் இப்போது அதிகரித்துவருகின்றன. பிள்ளைகள் சண்டைபோடுவது அவர்களின் தனிப்பட்ட போர். அது பெற்றோர்களின் கட்டுப்பாடு பற்றிய விஷயமே இல்லை. பெரும்பாலும் பெற்றோர்களுடன் இருப்பதால் இப்படி ஒரு தோற்றம் உருவாகிவிடுகிறது என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான கரன் ரெய்ன்.

சுயம் தேடும் பயணம்

வளரிளம் பருவம் என்பது ஒரு பையனோ பெண்ணோ தன்னுடைய சுயஅடையாளத்தைத் தேடும் ஒரு பயணம். அதில் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, பெற்றோர்கள், குடும்பம், நண்பர்கள், அசட்டுத் துணிச்சல், சமூக எதிர்ப்பு, பொழுதுபோக்கு, போதை, கனவுகள், குழப்பங்கள் என்று நிறைய கூறுகள் இருக்கின்றன. பிரச்சினைகளில் இளைஞர்களின் பார்வையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்களை நாம் பார்ப்பதே இல்லை என்கிறார்கள் ‘அடோலெசென்ஸ்: ஹவ் டு சர்வைவ் இட்’ புத்தகத்தை எழுதிய கல்வியாளர் டோனி லிட்டில், உளவியல் நிபுணர் ஹெர்ப் எட்கின்.

அந்தப் பையனைத் தரதரவென்று இழுத்துச் சென்று சலூனில் அமர்த்தி முடிவெட்டியபோது வெறும் தலைமுடிதானா கீழே விழுந்தது? எக்குத்தப்பாக வளர்ந்துகொண்டிருக்கும் தனது உடல் தோற்றத்தின் மீது அந்தப் பையனே வைத்திருந்த மரியாதை விழுந்தது. அவனை அவனது நண்பர்கள் கேலிசெய்து தள்ளிவைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை விழுந்தது. ஒருசில பெண்களாவது அவனை ஒரு வளர்ந்த ஆண்மகனாகக் கருதுவார்கள் என்னும் கனவு விழுந்தது. யார் புரிந்துகொள்ளாமல் போனாலும் தனது உணர்வுகளைத் தன் குடும்பம் புரிந்துகொள்ளும் எனும் உறுதி விழுந்தது. ‘நான் இனியும் சின்னப் பையன் இல்லை, எனது வாழ்வின் சில முடிவுகளையாவது நானே எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன்’ என்று அவன் நினைத்திருந்த பிம்பம் விழுந்தது. இன்னும் அந்த வளரிளம் பருவம் என்னும் நெடுகிய சூறாவளியில் அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கு அவன் மனதில் உறுதுணையாக இருந்த பல விஷயங்களும் அன்று விழுந்தன. இது தலைமுடி பற்றிய விஷயமில்லை.

இரண்டு நிகழ்வுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, எனக்கு நன்கு தெரிந்த ஒரு இந்திய இளைஞனைப் பற்றிய விஷயத்தைச் சொல்கிறேன். அவன் திடீரென்று தலைமுடியை வாருவதை நிறுத்திவிட்டான். தலைமுடியை வெட்டுவது பற்றிய கேள்வியே இல்லை. அவனது பெற்றோர்கள், ‘பிள்ளைகளின் தற்காலிகமான, சட்டப்படி தவறில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்னும் வழக்கம் உடையவர்கள். அவனது பள்ளியில் இது ஒரு தனிமனித விஷயம் என்று விட்டுவிட்டார்கள். மேலும், அவன் ‘நானொரு இசைக் கலைஞனாகப் போகிறேன்’ என்று கிடாரை எடுத்துக்கொண்டு சுற்றியதும் கூடுதல் பலமாக இருந்தது. ஆனாலும், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குக் கத்தரிக்கோல், சீப்பு பார்க்காத ஒரு தலை என்பது அந்தப் பள்ளியிலேயே, ஊரிலேயே, விநோதமாகத்தான் இருந்தது. ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இப்போது அவன் ஓரளவு பிரபலமான முழுநேர இசைக் கலைஞன். அவன் தலைமுடி அழகாக வெட்டப்பட்டு, முகத்தில் விழாமல் வாரப்பட்டிருக்கிறது. ‘ஏம்பா இப்போ மட்டும் இப்படி?’ என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது,, ‘என் காதலிக்கு இதுதான் பிடித்திருக்கிறது’ என்கிறான். இதுவும் தலைமுடி பற்றிய விஷயமில்லை.

சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி. என் நண்பருக்கு இரண்டு பையன்கள், கடைக்குட்டியாய் ஒரு பெண். திடீரென்று அவரது பெண் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றாளாம். பெற்றோருக்கோ அதிர்ச்சி. மகளோ, ‘எனக்குப் பிடித்திருக்கிறது. நான் அழகாக இருப்பேனா, பள்ளி நண்பர்கள் கிண்டல் செய்வார்களா என்பதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அடம்பிடித்தாளாம். இவர்கள் வேண்டாவெறுப்பாய் ஒப்புக்கொள்ள, மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிட்டாள். இரண்டு நாட்கள் கழித்து, ‘சீக்கிரத்தில் கிராப் போல முடி வளர்ந்துவிடும். அண்ணன்களுக்கு அனுமதி கொடுத்தாலும் கொடுப்பீர்கள், எனக்கு நிச்சயம் நீங்கள் அனுமதி கொடுக்கவே மாட்டீர்கள் என்று நினைத்தேன்’ என்றாளாம். இதுகூடத் தலைமுடி பற்றிய விஷயமில்லை.

பெரியவர்கள் என்ன செய்யலாம்?

ஆணோ பெண்ணோ, வளரிளம் பருவத்தினர் ‘இளம் மனிதர்கள்’ என்பதை இந்தியச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதையும், அவர்களின் அடிப்படை உணர்வுகளை மதிக்கத் தவறுவதையும் தனது ‘அடோலெசென்ஸ் இன் அர்பன் இந்தியா’ என்னும் புத்தகத்தில் நிறுவுகிறார் பரோடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷகுஃபா கப்பாடியா. சமூகக் கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருக்கும்போது, வளரிளம் பருவத்தினர் தங்களுக்கான சுயஅடையாளத்தைத் தேடுவதும் தக்க வைத்துக்கொள்வதும் மிகச் சிரமமாக இருக்கிறது. இந்தச் சிரமம், தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குப் போகாமல் இருக்க இளைஞர்களும் பெரியவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய பல வழிமுறைகளை உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

முதல் விஷயம், ‘நம் பெண்ணோ பையனோ இப்படிச் செய்ய மாட்டார்கள்’ என்ற தவறான நம்பிக்கையில் இருக்காதீர்கள். உலகெங்கும் இளைஞர்களின் மரணத்துக்கான காரணங்களில் தற்கொலை மூன்றாவது இடத்தை வகிக்கிறது. பிள்ளைகளின் வாழ்வில் திடீரெனப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர்களின் நடவடிக்கையில் – ரொம்பவும் கவலையுடன் இருப்பது, வெளி நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்வது, பசி தூக்கமின்றித் தவிப்பது என்பதுபோல – சில அபாயக்குறிகள் தெரியலாம். இதையெல்லாம் பெற்றோர்தான் உடனடியாகக் கவனிக்க முடியும். இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடுவதும் அவர்களின் சின்னச்சின்ன நல்ல காரியங்களை வாயாரப் பாராட்டுவதும் விளையாட்டுகள் போன்ற ஊக்கம் தரும் விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்துவதும் பெரியவர்கள் செய்யக்கூடிய காரியங்கள்தான். அவர்களின் சுதந்திரத்தில் ரொம்பவும் மூக்கை நுழைக்காமல், பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் எந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் கருத்தாகக் கவனிக்க வேண்டியதும் அவசியம்.

நம் பிள்ளைகளுடன் பேசலாம். குற்றஞ்சாட்டாமல், இடித்துரைக்காமல், அவர்களின் மீதுள்ள வாஞ்சையால் வரும் அக்கறையைச் சொல்லாம். ‘எனக்கு உன் பிரச்சினைகளை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது’ என்பது போன்ற தனிப்பட்ட நேரடியான உத்தரவாதங்களைத் தரலாம். ‘உன்னுடைய வளரிளம் பருவம் என்னும் சூறாவளியில் உன்னையே நீ அடையாளம் கண்டு உருவாக்கிக்கொள்ளும் பயணத்தில் உனக்குத் துணையாக நான் இருக்கிறேன்’ என்பதுதான் நாம் நம் இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய உறுதி. இந்தப் பயணத்தில் அவர்கள் சினிமாவுக்கோ தூங்கும் நேரத்துக்கோ தலைமுடிக்கோ உங்களுடன் தகராறு செய்யலாம். அது சினிமா பற்றிய, தூக்கம் பற்றிய, தலைமுடி பற்றிய விஷயம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

– பயணி தரன், ‘மாற்றம்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: dharan@payani.com