ஆஸ்திரேலியாவில் லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் மூச்சு திணறி உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கேக்குளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது.
அதனை தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.