சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரம் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, நேற்று நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 56 பேர் பலியாகியிருந்தனர். அதன்பின்னர் மேலும் 24 பேர் பலியானதையடுத்து, இன்று (27) காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
சீனா முழுவதும் 2744 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 450க்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal