ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார்.

இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியுடன் (ஆஸ்திரேலியா) மோத வாய்ப்பு இருக்கிறது. அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த அலீசனை சந்திக்கிறார்.

27-வது வரிசையில் இருக்கும் சீன வீராங்கனை வாங் 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார். தகுதி சுற்று வீராங்கனையான ஜாபேர் (துனிசியா) 7-6 (7-4), 6-1 என்ற நேர்செட் கணக்கில் வாங்கை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவை சேர்ந்த 32-வது வரிசையில் இருக்கும் ரோனிக், குரோசியாவை சேர்ந்த சிலிச்சை எதிர்கொண்டார்.

இதில் ரோனிக் 6-4, 6-3, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம் பியனுமான ஜோகோவிச் (செர்பியா) சந்திக்கிறார்.

ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 14-வது வரிசையில் உள்ள டியாகோவை (அர்ஜென்டினா) தோற்கடித்தார்.