வாகனங்களுக்கு மேலாக பயணிக்கும் பஸ் சீனாவில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிக்கு மேலாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நவீன பஸ் சீனாவில் நேற்றுமுன்தினம் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.

தரையிலிருந்து 2 மீற்றர் உயரத்தில் இந்த பஸ்ஸின் உடற்பகுதி காணப்படுகிறது. வீதிகளில் இரு மருங்களிலும் பதிக்கப்பட்ட விசேட தண்டவாளங்களின் மூலம் இந்த பஸ் பயணிக்கும். எனவே, இந்த பஸ்ஸின் அடியில் கார்கள் போன்ற 2 மீற்றருக்கு குறைந்த உயரம் கொண்ட ஏனைய வாகனங்கள் பயணம் செய்ய முடியும்.

இந்த பஸ்களில் மக்கள் பயணிப்பதால் வீதிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Transit Elevated Bus (TEB) என இந்த பஸ் அழைக்கப்படுகிறது. எதிர்கால விஞ்ஞானத் திட்டமொன்றைப் போல் இந்த நவீன பஸ் திட்டம் கருதப்படலாம். கடந்த மே மாதம் இது தொடர்பான வீடியோவொன்றை சீன அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், வெறும் கற்பனை யான திட்டமல்ல, யதார்த்த பூர்வமானது என்பதை சீன அதிகாரிகள் நேற்று முன்தினம் செயற்படுத் திக்காட் டினர்.

ஹேபேய் மாகாணத் தின் குய ஹுங்டோ நகரில் இந்த பஸ் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. 300 மீற்றர் நீளமான பாதை யொன்றில் இந்த பஸ் பயணித்தது.

72 அடி (21 மீற்றர் நீளமும் 25 அடி நீளமும் கொண்ட இந்த பஸ்ஸில் சுமார் 300 பேர் பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக மணித்தியா லத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் இந்த பஸ் பயணம் செய்ய முடியும். இந்த பஸ்ஸின் மொத்த உயரம் சுமார் 4 மீற்றர்களாகும்.

“இந்த பஸ்ஸின் மிகப் பெரிய நன்மை என்னவெனில், இதன் மூலம் வீதியில் அதிக இடத்தை மீதப்படுத்த முடியும்” என இத்திட்டத்தின் பிரதான பொறியியலா ளரான சோங் யூஸோ தெரிவித்துள்ளார்.
ஒரு சுரங்கப் பாதை போன்று இந்த பஸ் செயற்படுகிறது. ஆனால், சுரங்கப்பாதையொன்றை நிர்மாணிக்கும் செலவில் ஐந்தில் ஒரு பங்கு செலவே இதன் நிர்மாணத்துக்கு செலவாகும் என மற்றொரு பொறியியலாளரான பாய் ஸிமிங் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பஸ் எண்ணக்கரு புதியதல்ல. ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சீன பெய்ஜிங் சர்வதேச உயர்தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த பஸ்ஸின் சிறிய மாதிரியொன்று காட்சிப்படுத்தப்பட்டபோது இது குறித்து அவ்வளவாக கருத்திற்கொள்ளப்படவில்லை.