களைகட்டிய சென்னைப் புத்தகக்காட்சியில் இலக்கிய நூல்கள் புது வேகம் கூட்டியிருக்கின்றன. இம்முறை பல எழுத்தாளர்கள் நாவல்களோடு களம் இறங்கியிருந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுகதைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களில் பலரும் இந்த முறை நாவலின் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். முதல் நாவலை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களில் ஐவர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்…
சுமார் நாற்பது ஆண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளர் உருவானார். அவர் குறுநாவல் எழுதினால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ஏற்பட, அந்தக் குறுநாவல்களின் பகுதிகளும் மனதில் தோன்றின. அப்படித்தான் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவல் உருவானது. இந்தப் புது வடிவமான எழுத்துக்கு வேறு சொல் இல்லை என்பதால், இதை நாவல் என்று அழைக்கிறோம். நாவலில் வரும் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகளும் வெவ்வேறு விதமான பாணிகளைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளின் முடிவிலிருந்து வாசகர்கள் மீதிப் பகுதிகளை மனதில் எழுதிக்கொள்ளலாம். நாவலில் வரும் வண்ணத்துப்பூச்சிகள் அழகியல் பின்னணியைக் கொடுக்கின்றன. கடல் அலைகளில் மாட்டிக்கொள்ளாமல் பறந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சிகள் ஒருவகையில் குறியீடாகவும் ஆகின்றன. சிறுகதைகளைக் காட்டிலும் நாவலில் பல்வேறு பின்னணிகளையும் மனித உறவுகளின் மறைவுப் பகுதிகளையும் விரிவாகக் காட்ட இயலும். சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த எனக்குக் கதவு திறந்தது. அடுத்த கதையைப் பற்றி யோசிக்கும்போது அது நாவலாகவே விரிகிறது.
சுனில் கிருஷ்ணன்-‘நீலகண்டம்’ நாவலாசிரியர்
‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள நான்கைந்து கதைகள் எழுதியிருந்தபோதே ‘நீலகண்டம்’ எழுதத் தொடங்கிவிட்டேன். நியாயப்படி நாவலாசிரியராகத்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும். தத்துவத்தின் கலை வடிவம்தான் நாவல் எனும் பார்வை எனக்கு உவப்பானது. ஒரு வாழ்க்கையைச் சொல்வது என்பதைக் காட்டிலும், ஒரு கேள்வியின் சகல பரிமாணங்களையும் வாழ்விலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தொடுத்து, ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு ஒரு சமநிலையை அடையும் சாத்தியம் நாவலில் உள்ளது. சதுரத்தின் வரையறைகளை மீறி குழந்தைகள் தீட்டும் வர்ணங்கள் வழியும். எனினும், அது சதுரம் என்பதில் எவருக்கும் குழப்பம் இருக்காது. சிறுகதை என்பது குழந்தை தீட்டும் சதுரம்தான். நாவலை ஆக்டோபஸ் அல்லது ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியாசுரனுடன் ஒப்பிடலாம். சகல திசைகளிலும் நீளும் கரங்களை ஒரு மையம் பிணைத்திருக்கிறது. மையத்துடன் பிணைந்திருக்கும் வரை கணக்கற்ற கரங்கள் உருவாகியபடியே இருக்கலாம். ‘நீலகண்டம்’ இப்படியான ஒரு முயற்சி. என் மருத்துவமனைக்கு ஒரேயொருமுறை ஆட்டிச நிலையுள்ள தன் வளர்ப்பு மகனை அழைத்துவந்த தந்தை, ‘இதுக்கு நாங்க பிள்ளை இல்லாமலேயே இருந்திருப்போம்’ என்று விரக்தியில் தழுதழுத்ததுதான் ‘நீலகண்டம்’ நாவலின் விதை. என்னளவில் நாவல் எழுதிய காலகட்டம் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று.
ஜி.கார்ல் மார்க்ஸ்- ‘தீம்புனல்’ நாவலாசிரியர்
சிறுகதைகள் வாழ்வின் செறிவான தருணமொன்றைச் சுட்டுவதன் மூலம் வாழ்க்கை குறித்த விசாரணையை முன்வைப்பவையாக இருக்கின்றன. மிகக் குறுகிய எழுத்து வெளிக்குள் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. நாவல் இதே ஒன்றைப் பரந்த தளத்தில் விவாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அது அந்தப் படைப்பை விரிவான உரையாடலாகவும் மாற்றுகிறது. வாசகர்கள் அந்த உரையாடலில் பங்குபெறுகிறார்கள். இந்தப் பண்பே நாவல் வடிவத்தை வசீகரம் கொண்டதாக மாற்றுகிறது. தஞ்சை மாவட்ட வேளாண் மரபு சார்ந்த மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை அதன் சாதிய, பொருளாதார அரசியலோடு சேர்த்துப் பேசும் நாவல் ‘தீம்புனல்’. மூன்று தலைமுறைகள் என்றால் மூன்று மதிப்பீடுகள் அல்லவா? நிலம் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரமாக வருகிறது. ஆறு என்பதன் அர்த்தம் மாறிக்கொண்டே இருப்பதை நாவல் உக்கிரமாகப் பேசுகிறது. நிலத்துடன் புழங்கும் பெண்கள் பற்றிய நுணுக்கமான சித்திரம் இருக்கிறது. எந்தப் பூடகமும் இல்லாமல் நேரடியாக அவை சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த உரையாடல்களின் வழியாகவே இன்றைய வாழ்க்கை குறித்த விசாரணையை நாவல் பரந்த தளத்தில் மேற்கொள்கிறது.
ம.நவீன்- ‘பேய்ச்சி’ நாவலாசிரியர்
நான் எழுத வந்த காலகட்டத்தில் தமிழக இலக்கியவாதிகளின் ஆதிக்கமே மலேசியாவில் அதிகம் இருந்தது. சொல்லடக்கம், வடிவக் கச்சிதம், பூடகத்தன்மை ஆகியவை அந்தக் காலகட்ட இலக்கியத்தின் தன்மைகள். அதன் அளவீட்டைக் கொண்டுதான் இலக்கியப் பிரதிகளின் தரம் அளவிடப்பட்டது. எனது ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பும், ‘பேய்ச்சி’ நாவலும் வடிவக் கச்சிதமும் கட்டுப்படுத்தப்பட்ட மொழியையும் விட்டு விலகி நிற்பவை. 1981-ல் மலேசியாவில் நடந்த விஷச் சாராய மரண சம்பவங்களைப் பின்புலமாகக் கொண்டது ‘பேய்ச்சி’ நாவல். அதேசமயம், நாவலின் பின்னால் மௌனமாக ரப்பர் வீழ்ச்சியும் செம்பனை நடவும் காட்டப்பட்டுக்கொண்டே வரும். 1940-களில் தமிழகத்தில் தொடங்கும் நாவல் 2019-ல் மலேசியாவில் முடிகிறது. இந்த நெடிய காலகட்டத்தின் வரலாற்றுப் பின்னணியின் ஊடாக வரும் பெண்களே நாவலின் மையம். குழந்தையை ஏந்தும் அன்னையின் மடி, கொலைகளும் செய்யும் என்பதே ஆதார உணர்வு. கொலையன்னையர்கள் சூழ்ந்த உலகில் ஒரு சிறுவனின் வாலிப வயது வரையிலான அவதானிப்பாகவே நாவல் நகரும்.
கார்த்திக் பாலசுப்பிரமணியன்- ‘நட்சத்திரவாசிகள்’ நாவலாசிரியர்
நாவல், சிறுகதை என இந்த இரண்டு இலக்கிய வடிவங்களை ஒப்பிட சிறுகதையே என்னளவில் சவாலானது. மிகக் குறைவான வார்த்தைகளுக்குள் சொல்ல விரும்பியதைச் சொல்ல வேண்டும். நாவலில் சற்று சுதந்திரம் உண்டெனினும், அது தன்னளவில் தொடர்ச்சியான உழைப்பையும் ஒழுங்கையும் கோருகிறது. சிறுகதை வாழ்வின் ஒரு சிறு தருணத்தின் மேல் ஒளி பாய்ச்சும் என்றால், நாவல் ஒட்டுமொத்த வாழ்வின் பல்வேறு கோணங்களைப் பேசுகிறது. சிறுகதையிலிருந்து நாவல் எழுத வரும் ஒருவருக்கு முதலில் இவ்வடிவச் சிக்கலே பெரும் தடையாக இருக்கிறது. சக மனிதரிடத்தில் கரிசனத்துடன் கூடிய அணுகுமுறையும், தான் சார்ந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறையும், பரவலான வாசிப்பும், கூர்ந்த அவதானிப்பும் இச்சிக்கல்களைப் போக்க சிறிது உதவக்கூடும். மற்றவை அவரவர் கைமணல். எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே தகவல் தொழில்நுட்பத் துறையின் வருகையும் நன்மைகளோடு சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. இந்தத் துறையின் உள்ளிருந்து ஒலிக்கும் குரல்களைச் சற்று விலகி நின்று பதிவுசெய்வதன் வழியே எனது ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறது.
த.ராஜன்