காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவு படுத்தப்பட வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடமிருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல் போயுள்ள மக்கள் யுத்தத்தின் போது உயிரிழந்து விட்டதாக ;ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களை மீண்டும் தன்னால் கொண்டுவரமுடியாது என்றும் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ;ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புக்கள், துயரங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சர்வ சாதாரணமாகத் தெரிவித்துள்ளார்.
தமது உறவினர்கள் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்றும் என்றாவது ஒருநாள் அவர்களின் குரல் தமது காதுகளுக்குக் கேட்கும் என்றும் பல வருடங்களாகத் துயரத்துடன் வாழ்ந்துவரும் ; யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடும் நோக்கத்துடன் ஜனாதிபதி ‘இது தான் உண்மை’ என்று தனக்குத் தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல இந்தச் செய்தி ‘யுத்தத்தில் பொறுப்புக்கூறல்’ விதி முறைகளுக்கு அமைவானதாக இல்லை.
காணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் உயிரிழந்துவிட்டார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்.
Eelamurasu Australia Online News Portal