யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நிறைவு பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் லக்மாலி லியனஆராச்சி நிலைநாட்டிய தேசிய சாதனை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்து சுசந்திகா ஜயசிங்கவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை சர்வதேச தொழில்நுட்ப அதிகாரி மற்றும் விழா தொழில்நுட்ப பணிப்பாளர் பி. எச். டி. வைத்யதிலக்கவினால் நிராகரிக்கப்பட்டது.
800 மீற்றர் ஓட்டப் போட்டி புல்தரை ஓடுபாதையில் நடைபெற்றதாலும் நேரக் கணிப்பு கருவிகள் கையால் இயக்கப்பட்டமையாலும் 800 மீற்றர் ஓட்டப் போட்டி முடிவு நேரங்கள் கருத்தில் கொள்ளப்படக்கூடாது என சுசந்திகா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கையால் கடிகாரத்தை இயக்கிய மூவரினதும் நேரங்களும் ஒத்திருந்ததாலும் 800 மீற்றருக்கு மேற்பட்ட தூரங்களைக் கொண்ட ஓட்டப் போட்டிகளுக்கான நேரக் கணிப்புக்கு கையால் இயக்கும் நேரக்கணிப்புக் கருவிகள் பாவிப்பதற்கு சர்வதேச மெய்வல்லநர் சங்கத்தின் சட்டம் இடம்கொடுப்பதாலும் சுசந்திகாவின் வாய்மூல ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டது.
மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா சர்வதேச மெய்வல்லுநர் சங்கத்தின் சட்டத்திட்டங்களை அறிந்திருந்தும் ஆட்சேபம் எழுப்பியமை வியப்பைத் தருவதாக தேசிய விளையாட்டு விழாவில் மத்தியஸ்தம் வகித்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பார்ஸிலோனாவில் 1992இல் தம்மிக்கா மெனிக்கேயினால் 800 ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்டிருந்த 2 நி. 03.85 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை நிமாலி லியனஆராச்சி (2 நி. 03.5 செக்.) வெள்ளியன்று முறியடித்தார்.