கடந்த ஒரு மாதத்திறகு மேலாக அவுஸ்திரேலியாவின் பெரும் பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மக்களும் உயிரினங்களும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகின.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் உட்பட கிழக்கு அவுஸ்திரேலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புழுதிப் புயல் அடித்தது.
குறித்த புழுதிப்புயுல் சூரியனை மறைக்கும் அளவு காற்று உயர்ந்து, பகல் பொழுதையே இரவு நேரம்போல் காட்சியளிக்க வைத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அதில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் ;கன்பெரா (Canberra) பகுதியில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் ஆரம்பமாகிய கனமழை இரவு 7 மணி வரை நீடித்திருக்கிறது. அதனூடாகவே ஆலங்கட்டி மழை வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் மீது விழுந்திருக்கின்றன.
ஆலங்கட்டி ஒவ்வொன்றும் கோல்ப் (golf) பந்து அளவில் இருந்ததாக அவ்வூர் மக்கள் சமூக இணையத்தளங்களில் படங்களை பதிவேற்றுள்ளனர். இந்த ஆலங்கட்டி மழையால் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அவசர உதவி தொலைபேசி எண்ணுக்கு 1,200 பேர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால், காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். அதிக அழைப்பால், அந்த எண்ணும் சிறிது நேரம் தடங்கலாகியுள்ளது.
சுமார் 20,000 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் பொதுப்போக்குவரத்தான ரயில் பயணம்கூட மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் முக்கியமான நேரங்களில் ரத்து செய்யப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 4.5 சென்றி மீற்றர் அளவு ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. “பலத்த காற்றால் பல மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்து, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட அலுவல் பாதிக்கப்பட்டதோடு பல பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது” என சதர்லேண்ட் (Sutherland) பிரதேசவாசி ஒருவர் கூறியுள்ளார்.
மனிதர்கள், வீடுகள் மட்டுமன்றி இதனால் நிறைய பறவைகளும் காயம்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
>இப்படி ஒரு சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதனால் ஓரளவு சேதம் குறைந்துள்ளது. கன்பெராவைத் தொடர்ந்து தலைநகர் சிட்னிக்கும் ஆலங்கட்டி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
