அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவிவரும் காட்டுத்தீணை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வியாழக்கிழமை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானமொன்றுதெற்கு நியூ சவுத் வேல்ஸில் திடீரென காணமல் போனது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவுக்கு தெற்கே உள்ள பனி மலைகளில் விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விமானத்தில் பயணித்த மூன்று பேரும் ;அடையாளம் காணப்படாதபோதிலும் குறித்த மூவரும் அமெரிக்கப் பிரஜைகள் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குள்ளான ஹெர்குலஸ் சி -130 என்ற விமானம் அவுஸ்திரேலியாவில் பரவிவரும் கடுமையான காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டது.
விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் கன்பரா முழுவதும் 80 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.