அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களும் மகிந்தவின் தவறான புரிதலும்!

சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார். அதாவது, எப்போதும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகக் காட்டும் விதமாகவும் அரசாங்கத்தையும் தமிழ் மக்களையும் எப்போதும் பிரித்து வைத்திருக்கும் விதமாகவே தமிழ் ஊடகங்கள் செய்திகளை எழுதுகின்றன. அது தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் வேலை. ஆதனை நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உண்மையை மட்டுமே தமிழ் மக்களுக்குச் சொல்லுங்கள் – என்றவாறு மகிந்த தமிழ் ஊடகங்களுக்கு பொங்கல் அறிவுரையை வழங்கியிருக்கின்றார். இதே போன்று சிங்கள செய்தியாளர்களை, பத்திரிகை ஆசிரியர்களை அழைத்தும் அவர் அறிவுரைகளை கூறுவாராக இருந்தால் அது நாட்டுக்கு நன்மையை கொண்டுவரலாம்.

அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களை எதிர்பார்க்கும் ஒரு போக்கு இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அது தமிழர் பிரச்சினை கருக்கொண்டதிலிருந்தே ஆரம்பித்த ஒன்று. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்தியாவின் தலையீடு நிகழ்ந்தது. ஒரு நாடு தனது பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொள்ள முடியாதவொரு சூழலில்தான் வெளியாரின் தலையீடுகள் நிகழ்கின்றன. அப்படித்தான் இலங்கைக்குள்ளும் வெளியாரின் தலையீடுகள் நிகழ்ந்தன- இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. – இனியும் அது நிகழும். கோட்டபாய ராஜபக்சவின் இந்தியாவிற்கான முதலாவது வியஜத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாக சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டம் இன்று வரை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. 2015இல் மைத்திரி-ரணில் அரசாங்கம் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் கூட, அரசியல் தீர்வு தொடர்பில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே பேசப்பட்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஏன் வெளியார் பேச வேண்டி ஏற்படுகின்றது? இலங்கைக்குள் அது முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் நரேந்திர மோடி ஏன் அது தொடர்பில் சேப்போகின்றார்? ஏன் மற்றவர்கள் பேசப்போகின்றனர்? இப்போது பிரச்சினை யார் பக்கத்தில் இருக்கின்றது? இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலா அல்லது தமிழர் பக்கத்திலா?

இலங்கையின் மீதான இந்திய தலையீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு வேளை, தமிழர்களுக்கான அரசியல் பிரச்சினை என்று ஒன்று இல்லாவிட்டால் கூட, இந்தியாவின் தலையீடு இல்லாமல் போகப்போவதில்லை. மகிந்தவிற்கு விசுவாசமான சில சிங்கள ஊடகங்கள் செய்தியிடுவது அல்லது தலைப்புச் செய்தியிடுவது போன்று, இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு எடுத்துக் கொடுப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றல்ல. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிவிவகாரக் கொள்கையின் தவறினால் பிறந்த குழந்தையே இந்திய – இலங்கை ஒப்பந்தம். பனிப்போர் கால உலக அரசியல் போக்கில் தாங்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை மறந்து சேரக் கூடாத இடத்தில் சேர்ந்ததன் விளைவாகவே இந்தியா இலங்கை விடயத்தில் நேரடியாக தலையீடு செய்ய நேர்ந்தது. தமிழர் பிரச்சினை அந்த தலையீட்டிற்கான ஒரு காரணியாகவே இருந்தது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை அதன் சமநிலையை இழந்து போகின்ற போதெல்லாம் இந்தியாவின் தலையீடும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இது இனியும் நிகழும். எப்போதும் நிகழும். ஏனெனில் இந்தியா இந்த பிராந்தியத்தின் சக்தி. அதனை மறுதலிக்கும் வகையில் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் நடந்து கொள்கின்ற போதெல்லாம், இந்தியாவின் தலையீடு நிகழும்.

With Modi_3

எனவே தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை – அதாவது மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று உள்ளுக்குள் தீர்வை கண்டாலும் கூட வெளியாரின் தலையீடுகளும் அழுத்தங்களும் நின்றுவிடப் போவதில்லை. மகிந்த ராஜபக்ச 2015இல் தோல்விடைந்தது, அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கவில்லை என்பதற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் இந்திய உளவுத் துறை மீதும் அமெரிக்க உளவுத்துறை மீதும் குற்றம் சாட்டியிருந்தார். ஏன் அவ்வாறான உளவுத் துறைகள் அவரது தோல்விக்காக பணியாற்றின? தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுக்கவில்லை என்பதற்காகவா?

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்கள் எழுகின்ற போதெல்லாம், இந்தியாவின் ஆதரவை கோருக்கின்ற ஒரு அரசியல் போக்கும் தமிழர் மத்தியில் இருக்கின்றது. இப்போதும் அந்த நிலையில் எந்தவொரு பெரிய மாற்றமும் இல்லை. ஆங்காங்கே சில இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்ட, சிறிய குழுக்கள் இருந்த போதிலும் கூட, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இந்தியாவின் ஆதரவை கோரும் கட்சிகளாகவே இருக்கின்றன. ஏன் இந்த நிலைமை தொடர்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்பதில் கொழும்பின் ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் பணியாற்றவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் தமிழ் தலைமைகள் புதுடில்லியை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. உண்மையில் சம்பந்தனின் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பில் பல்வேறு விமசனங்கள் இருந்த போதிலும் கூட, கடந்த ஜந்து வருடங்களாக சம்பந்தன் முற்றிலும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது மட்டும் நம்பிக்கை வைத்தே செயற்பட்டிருந்தார்.

இந்திய ராஜதந்திரிகள் இலங்கை வருகின்ற போது, அவர்களை சந்திப்பது என்னும் நிலையில் மட்டுமே கூட்டமைப்பி;ற்கும் – புதுடில்லிக்குமான உறவு இருந்தது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில், ஒரு முறை கூட புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கவில்லை. அந்தளவிற்கு இலங்கை;குள் நாங்கள் மட்டுமே பேசி இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். புதுடில்லிக்கு சென்று நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பிற்குள்ளும் கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம் – நாம் அவ்வாறு செய்தால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்னும் பதிலுடன் அவற்றை சம்பந்தன் புறம்தள்ளினார். தமிழ் அரசியல் வரலாற்றில் சம்பந்தன் அளவிற்கு இலங்கை அரசாங்கங்களுடன் ஒத்துப் போய் விடயங்களை செய்யலாம் என்று வேறு எவரும் முயற்சி செய்ததில்லை. தமிழர் தரப்பில், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவாறு சம்பந்தன் உள்ளுக்குள் மட்டும் பேசி தீர்வை காண்பதற்கு முயற்சித்திருந்தார். ஆனால் நடந்தது என்ன? இந்த பன்புலத்திலிருந்துதான் வெளியார் தொடர்பான நம்பிக்கையை நோக்க வேண்டும். சிங்கள ஆளும் வர்க்கம் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வதற்கு மறுக்கின்ற சூழலில்தான், தமிழர் தரப்புக்கள் இந்தியாவின் ஆதரவை கோருக்கின்றன. இந்தியா கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அவைகள்தான் தமிழ் ஊடகங்களால் செய்தியிடப்படுகின்றன.

Gotabaya-Rajapaksa-and-Narendra-Modi

இந்திய பிரதமர் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றார் ஆனால் ஜனாதிபதி கோட்டபாயவோ 13இல் உள்ள சில விடயங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். ஆனால் மகிந்த ராஜபக்சவோ 13 பிளஸ் என்று கூறுகின்றார். தம்பி 13 மைனஸ் என்கிறார் – அண்ணனோ 13 பிளஸ் என்கிறார். இந்த நிலையில் உள்ளுக்குள் இருக்கும் அந்த அரசியல் தீர்வு என்ன? 13இற்கு மேலா அல்லது 13இற்கு கீழா? இலங்கைக்குள் இவ்வாறான குழப்பங்கள் நிலவுகின்ற போது, தமிழர்கள் வெளியாரை நோக்கி கோரிக்கைகளை முன்வைபத்தில் என்ன தவறு உண்டு? எனவே இந்தியா தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர் – தமிழ் ஊடங்கள் செய்தியிடுகின்றன என்றால் அது அவர்களின் தவறல்ல. இலங்கையின் ஆடசியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை புறக்கணித்து வருவதன் விளைவாகவே தமிழர்கள் இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தீர்வு இழுத்தடிககப்படும் வரையில் இந்த நிலைமையும் அப்படியேதான் தொடரும். மகிந்தவின் பொங்கல் விருந்துகள் இந்த நிலைமையை மாற்றியமைக்கப் பயன்படாது.

யதீந்திரா