நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கைகளை மட்டுமல்லாது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் முழுமையாக எதிர்த்த நபர் நானே. அதனால் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தோல்வியில் முடிந்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன :- ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
இதுதான் உண்மையாகும், இதன் காரணமாகவே மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தை வழங்கினர். ஐக்கிய தேசிய கட்சி விரட்டவும் வேறு பல வெற்றிகளை நாம் பெறவும் இதுவே காரணமாக அமைந்தது.
இதன்போது மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச:- உண்மை வெற்றிபெற்றது என்று சபை முதல்வர் கூறினார். வாழ்வாதார பொருட்களின் விலையுயர்வு, மரக்கறிகள் விலைகள் உயர்ந்து மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதை பார்க்கும் போது உண்மை வென்றதா அல்லது பான் வென்றதா என்பது நன்றாக தெரிகின்றது. அரசியல் மேடைகளில் கூறிய உண்மைகளையாவது வெற்றிபெறச்செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.