69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – பதிவுகளை நம்பலாமா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில், பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் குழு புகைப்படம் ஒன்று சுவாரஸ்ய உலக சாதனையை விளக்கும் வகையில் பகிரப்படுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே பெண் தான் பெற்றெடுத்தார் என கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில், “ஒரே பெண்மணிக்கு பிறந்த அதிகளவு குழந்தைகள் எண்ணிக்கை 69. ரஷ்யாவை சேர்ந்த திருமதி வசில்வேயா என்பவர் 16 இரட்டை குழந்தைகள், ஏழு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்படத்தை ஆய்வு செய்ததில், சமூக வலைதள வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பெண் உலகில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்ற சாதனையை புரிந்திருக்கிறார். எனினும், வைரல் புகைப்படத்திற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தற்சமயம் வைரலாகும் புகைப்படம் 1904-ம் ஆண்டு எடுக்கப்பட்டதும், இதில் இருப்பது ஜோசப் ஜெ ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தார் ஆகும். இவர் லேட்டர் டே செயின்ட் தேவாலயத்தின் தலைவர் என உட்டா வரலாற்று பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவர் என இணையத்தில் தேடிய போது, வசில்வேயா பெயரை குறிப்பிட்டு பல்வேறு செய்திகள் கிடைக்கப்பெற்றன.

அவ்வாறு தனியார் செய்தி நிறுவன கட்டுரையில், 1725 முதல் 1765 வரையிலான காலக்கட்டத்தில், மாஸ்கோவில் வசில்வேயா என்பவர் 16 இரட்டை குழந்தைகள், ஏழு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனையிலும் இவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதனை உறுதிப்படுத்தும் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை. அந்த வகையில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவருக்கும், ரஷ்யாவில் 69 குழந்தைகளை பெற்றெடுத்தவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.