அகதிகளை சிறை வைக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பப்பு நியூ கினியாவில் உள்ள பொமனா சிறை வளாகத்தில் அமைந்துள்ள குடிவரவுத் தடுப்பு மையத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தூக்கமின்மையால் சித்ரவதைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நிதியுதவினால் கட்டப்பட்ட பொமனா சிறை வளாகத்தில் கட்டப்பட்ட குடிவரவுத் தடுப்பு மையத்தில், ஏழு ஆண்டுகளாக மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களில் 18 பேர் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இத்தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களில் 30க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டிற்கு திரும்புவதாக ஏற்றுக்கொண்ட நிலையில் தடுப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர. இவர்கள் உடல்ரீதியாக மிகவும் நலிவுற்று இருப்பதாகவும் மனநல ரீதியாக மிகவும் உடைந்த போய் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள், தூக்கமற்ற இரவுகளை கழித்ததாக கூறுகிறார் பப்பு நியூ கினியாவைச் சேர்ந்த பாதிரியார் கியோர்கியோ லிசினி.

“தடுப்பு மையத்தில் உணவு பற்றாக்குறை, கடுமையான தூங்கும் நிலைமைகள் இருப்பதாக தஞ்சக்கோரிக்கையாளர்கள் தெரிவித்தனர். தலையணை இல்லை, தடுப்பு மையத்தை சுற்றி சத்தம், சில இடங்களில் ஒலிபெருக்கிகள் இருந்ததாகவும் கூறினர். இந்த சத்தத்தினால் பல இரவுகளை தூக்கமின்றி கழித்ததாக அவர்கள் சொல்லி அறிந்தேன். சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு கையெழுத்திட வைக்கவே இவ்வாறு தூங்க விடாமல் செய்ததாக அவர்கள்(தஞ்சக்கோரிக்கையாளர்கள்) எண்ணுகின்றனர்,” எனக் கூறியுள்ளார் பாதிரியார் லிசினி.

தற்போது பொமனா தடுப்பு மையத்தில் உள்ள 18 தஞ்சக்கோரிக்கையாளர்களில் 10 பேர், சொந்த நாடு திரும்ப ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இம்மாத இறுதியில் அவர்கள் தடுப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக பாதிரியர் லிசினி தெரிவித்திருக்கிறார்.