GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதன் கண்காணிப்பு செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலத்தீவு தூதுக்குழுவின் துணைத் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பார்ட் (Thorsten bargfarde) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, இந்நாட்டின் ஆடை உற்பத்தி துறைக்கே அதிகளவான GSP+ வரிச் சலுகை கிடைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதியில் நூற்றுக்கு 60 சதவீதமான ஏற்றுமதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நாட்டு மொத்த ஏற்றுமதியில் 43 சதவீதம் ஆடை ஏற்றுமதியாக பிரதிபலிப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வருமானத்தில் வருடத்திற்கு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கும் பிரதான உற்பத்தி தொழில்துறையாக ஆடை உற்பத்தி காரணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெற்றுக் கொடுக்கும் ஆதரவு தொடர்பில் அரசாங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீட்டாளர்கள் இந்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வத்துடன் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அவர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.