தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘றெக்க’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகப் படங்கள் வெளியானாலும் அவரின் பேச்சு எப்போதுமே யதார்த்தத்தின் அழகுடன் வெளிப்படும். அவரிடம் பேசியதிலிருந்து…
றெக்க’ மூலமாக நீங்களும் கமர்ஷியல் நாயகனாகிவிட்டீர்களே…
‘றெக்க’ மட்டுமல்ல ‘ஆண்டவன் கட்டளை’ , ‘தர்மதுரை’ இரண்டுமே கமர்ஷியல் படங்கள் தான். ‘றெக்க’யில் காதலைச் சேர்த்து வைக்கிற நபராக நான் நடித்திருக்கிறேன். அதுக்கு ஒரு காரணம் வேண்டாமா? அதனால் காதல் ப்ளாஷ் பேக் இருக்கும். அதை வைத்துத்தான் இக்கதை நகரும். மேலும், பஞ்ச் வசனங்கள் பேசும்போது இயக்குநரிடம் “உங்களுடைய வசனங்களே ரொம்ப வலுவாக இருக்கின்றன. அவற்றை நான் சத்தமாகப் பேசினால், மிகவும் வலுவாக அமைந்துவிடும் என்பதால் சத்தம் கம்மியாகப் பேசுகிறேன்” என்று சொன்னேன்.
ஒரு பிரச்சினையை முடிக்கப் போய் இன்னொரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான். அது நாயகனைப் பெரும் பிரச்சினையில் சிக்க வைக்கிறது. எப்படி அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் நாயகன் வெளியே வந்தான் என்பதுதான் இந்தப் படம்.
‘மக்கள் செல்வன்’ என்ற பட்டம் எப்படியிருக்கிறது?
அதனை ஏன் பட்டமாகப் பார்க்கிறீர்கள். என் இயக்குநர் சீனு ராமசாமி எனக்கு வைத்த பெயர். வேறு யாராவது வைத்திருந்தால்கூட எடுத்திருப்பேன். அவர் சும்மா அந்தப் பெயரை வைத்திருக்க மாட்டார். ஏனென்றால் அவர் பேசினாலே அவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் உங்களை எதிர்பார்க்கலாமா?
இந்த மாதிரியான படங்களிலும் அதிகம் நடிக்க வேண்டும். எனக்கான மரியாதை வலுவான கதையம்சம் உள்ள படங்கள் மூலமாகக் கிடைத்திருக்கிறது. ‘றெக்க’ மாதிரியான படங்கள் பண்ணும் போது, மக்களிடையே இன்னும் அதிகமாகப் போய்ச் சேர முடியும். அதன் மூலமாக நான் நடிக்கும் நல்ல படங்களுக்கும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 10 பேர் மட்டும் பார்த்து பாராட்டுகிற படங்கள் மட்டும் பண்ணினால் என்னைத் தேடி தயாரிப்பாளர்கள் வரவே மாட்டார்கள். தற்போது, நான் நடிக்கவிருக்கும் 5 படங்களில் எதுவுமே ‘றெக்க’ சாயலில் இருக்காது.
சிவகார்த்திகேயன் படத்தை நீங்கள் கொண்டாடியிருக்கிறீர்கள். இது யாருடைய திட்டம்?
என்னுடைய திட்டம்தான். என் சமகால நடிகனைக் கொண்டாடுகிறேன். எனக்கு எந்தவொரு ஈகோவும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும். அப்படியானால் மட்டுமே நான் வாழ முடியும். சினிமா தானே எனக்குச் சோறு போடுகிறது. நான் எப்படி இன்னொரு சினிமா நல்லாயிருக்கக் கூடாது என்று நினைக்க முடியும்?
ஸ்டண்ட் யூனியனுக்கு உதவியிருக்கிறீர்களா?
சினிமா என்பது ஒரு தனிப்பட்ட ஆன்மா. சினிமாவில் என்னவாகப் போகிறீர்கள் என்பதைத் தாண்டி சினிமாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவசியமின்றி நான் பண்ற உதவி, சம்பந்தப்பட்டவர்களைச் சோம்பேறித்தனமாக ஆக்கும் என நான் நினைக்கிறேன். நான் லைட்மேன்கள், ஸ்டண்ட் மேன்கள் அவர்களுடைய கஷ்டத்தைப் படப்பிடிப்பில் பார்த்திருக்கிறேன் என்பதால் உதவினேன்.
மற்ற நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் போன்று, உங்களுடைய மன்றங்கள் வெளியே தெரிவதில்லையே என்ன காரணம்?
என்னுடைய ரசிகர்களிடம் ஆர்ப்பாட்டமின்றிப் பண்ணுங்கள், ஆர்ப்பாட்டம் பண்ணினால் மூடிவிட்டுப் போய்விடுங்கள், யாருடனும் சண்டையிட்டு என்னுடைய படத்தை விளம்பரப்படுத்தாதீர்கள், சண்டையிட்டு உங்களுக்கு ஏதாவது நடந்தால், என்னுடைய காதுக்குக்கூட வந்து சேராது என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ இருப்பவர்கள் எனக்காக வேலை செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அவர்கள் செய்யும் வேலை என்னை வந்து சேராது. அவர்களாகப் பிடித்துப் பண்ணுகிறார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது.
உங்களுடைய கதாநாயகன் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
நான் சொந்த வீடு கட்டிவிட்டுத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நான்தான் முதலில் திருமணமே செய்தேன். இப்படி எல்லாம் நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிய எதுவுமே நடக்கவில்லை. அதற்குப் பிறகு வாழ்க்கை போகிற போக்கில் நான் பயணிக்கத் தொடங்கினேன். இது எப்படி நடந்தது, வாழ்க்கை இன்னும் எங்கே கொண்டுபோகப் போகிறது என்ற எந்த சிந்தனையுமே இல்லை. இந்த அனுபவத்தில் நானே மனது, குணம் உள்ளிட்ட விஷயங்களில் நிறைய மாறியிருக்கிறேன் என்பது தெரிகிறது. எனது வாழ்க்கை ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
கா.இசக்கிமுத்து