இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நாளை (ஜனவரி 19) நடைபெற உள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.
விராட் கோலி தலைமை யிலான அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அந்த அணியை தோற்கடிக்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
இரவில் பனித்துளி அதிகமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி ‘சேசிங்’ செய்யவே விரும்பும். கடந்த 2 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் டாஸ் வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை எட்டியது. 2-வது போட்டியில் 341 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. பனித்துளியால் ஈரப்பதம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து வீசுவது சவாலானது.
தொடக்க வீரர்களான தவானும், ரோகித்சர்மாவும் காயம் அடைந்து இருப்பது அணிக்கு பாதிப்பாகும். ஆனால் இருவருக்கும் பயப்படும்படியான காயம் இல்லாததால் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும். ‘டாப் 3’ பேட்ஸ்மேன்கள் ரோகித்சர்மா, தவான், கோலி மற்றும் ராகுலின் ஆட்டத்தை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். 4-வது வரிசையில் விளையாடும் ஷிரேயாஸ் அய்யர் கடந்த 2 போட்டியிலும் சோபிக்க வில்லை. இதனால் அவருக்கு சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது.
பந்து வீச்சில் பும்ரா, முகமதுஷமி, குல்தீப்யாதவ், ஜடேஜா நல்ல நிலையில் உள்ளனர். நவ்தீப்சைனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.
ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டீவ்சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ்கேரி ஆகியோரும், பந்து வீச்சில் ஸ்டார்க், கும்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம்ஜம்பா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடக்க உள்ள போட்டி இரு அணிகளுக்கிடையேயான 140-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 139 ஆட்டத்தில் இந்தியா 51 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 78-லும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இரு அணிகளின் வீரர்கள் நிலவரம் பின்வருமாறு:-
இந்தியா; விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ஜடேஜா, ஷிவம் துபே , குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனிஷ் பாண்டே, ஸ்ரீகர் பரத்.
ஆஸ்திரேலியா; ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித், மார்ன்ஸ் லபுஷ்சேன், ஹேண்ட்ஸ்ஹோம், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் டர்னர், ஸ்டார்க், கும்மின்ஸ், ஹாசல்வுட், கானே ரிச்சர்ட் சன், ஆஸ்டன் அகர், ஆடம் ஷம்பா, ஆர்சி ஷார்ட்.