கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு 243 பேருடன் சென்ற இந்திய படகு காணாமல் போகி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஆனால் இதுநாள் வரை அப்படகுக்கு என்ன நடந்தது? இப்படகு தடுத்து நிறுத்தப்பட்டதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா? அல்லது இடையே எங்கேனும் விபத்திற்கு உள்ளானதா என எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட இப்படகில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சொல்லப்படும் நிலையில், படகில் சென்றவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியாமல் இவர்கள் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உள்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டெல்லியில் உள்ள
மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை குறித்த படகில் பயணமானவர்களின் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். ஒரு வருடமாகியும் படகுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத பின்னணியில் தமது உறவினர்களுக்கு நலமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தாலே போதுமானது எனச் சொல்கிறார் தனது சொந்தங்கள் 10 பேரை இப்படகில் தொலைத்த ஒருவரின் கருத்தை ஆஸ்திரேலிய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அப்படகு குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா என கேரள காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு விசாரணைகள் தொடர்வதாகவும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் சிறப்பு விசாரணைக் குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக ஆஸ். ஊடகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், படகு காணாமல் போகி ஓராண்டு கடந்துள்ள நிலையில் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து எல்லைப் பாதுகாப்பு தரப்பு வெளியிடவில்லை.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது. அதே போல், இந்த கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன் படகு மூலம் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அகதிகள் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இன்றும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.