அப்துல் ரகுமான் என அறியப்படும் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர், விசா காலம் முடிந்த நிலையில் கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மிகுந்த சோர்வுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாணம் அருகே மிதந்து கொண்டிருந்த அவரை, உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டிருக்கிறார்.
“கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நீந்திச் செல்ல முயன்ற நிலையில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் கடலில் தவித்து வந்திருக்கிறார்,” எனக் கூறியிருக்கிறார் மலாக்கா காவல்துறையின் தலைமை அதிகாரி ஆல்பெர்ட் நீனோ.
“அவர் மீட்கப்பட்ட பொழுது, மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்,” எனத் தெரிவித்திருக்கிறார் நீனோ.
காவல்துறையின் தலைமை அதிகாரி நீனோ வழங்கிய தகவலின் படி, கடந்த டிசம்பர் மாதம் அல்ஜீரியரிலிருந்து கிழக்கு திமோருக்கு வந்துள்ளார் அப்துல் ரகுமான். விசா காலம் முடிந்த நிலையில், கையில் பணமின்றி இருந்த நிலையில் ஆஸ்திரேலியாவை நோக்கி நீந்திச் செல்ல இந்த அல்ஜீரியர் திட்டமிட்டதாக சொல்லப்படுகின்றது.
பெரிய அலைகளாலும் மோசமான வானிலை நிலவியதாலும் இவரால் தொடர்ந்து நீந்திச்செல்ல முடியவில்லை எனக் கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட அல்ஜீயிரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியதன் பின்னர், அவரிடம் இந்தோனேசிய குடிவரவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal