அறிவுக்காக வாழ்பவர்களை நான் நேசிக்கிறேன்!

புத்தகங்கள் என் கனவு என்பதைவிட விட புத்தகங்கள் உருவாக்கும் பிரம்மாண்டமான கனவுக்குள் நான் நடமாடுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்து வளரும் குடும்பச் சூழல், பாலின பேதங்கள் உருவாக்கும் தடைகள் அனைத்தையும் கடந்து செல்ல இந்தக் காகிதக் கதவுகளைத் திறந்தபோதுதான் வழி கிடைத்தது.

என் வாழ்க்கையில் நான் முதலும் கடைசியுமாக செய்த திருட்டு மூன்றாம் வகுப்புப் படிக்கையில் பள்ளி நூலகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுவந்ததுதான். அப்போது அது தவறு என்றுகூடத் தெரியாது. அது தெரியவந்து வகுப்பறையில் வைத்து ஆசிரியைக் கண்டித்தபோது இளம் மனதில் பெரும் காயமாகியது. ஆனால், அந்தக் காயத்திலிருந்துதான் இடையறாது வளர்ந்தது வாசிப்பு என்ற பெருங்கனவு.

பணம் கொடுத்து புத்தகங்களை வாங்கவெல்லாம் கையில் காசு இருக்காது என்பதால் எனது கல்லூரி நாட்கள் பெரும்பாலும் நூலகத்தில்தான் கழிந்தன. பள்ளியிலும் கல்லூரியிலும் எனது வாசிப்புக்காகவே ஒரு தனித்த அடையாளம் கிடைத்தது. அது ஒவ்வொன்றிலும் எனக்குத் தனிப்பட்ட ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கித்தந்தது. நான் பேசுகிற சொற்கள் இலக்கியப் பிரதிகள் வழியே உருவாகிவந்தன. அது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது புதிய உறவுகள் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த என்னை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு சபையில் எழுந்து நின்று பேசும்போது நமக்கு ஒரு வெளிச்சத்தைத் தருபவை எழுத்தின் வழியே என்னை ஆட்கொண்ட ஆசான்களின் சொற்களாக இருந்தன. புத்தகங்கள் காட்டிய உலகம் அன்றாடங்களிலிருந்து வேறுபட்டிருந்தன. வாழ்வில் பிற வெற்றி தோல்வி எல்லாம் இதன் முன் அபத்தமான சொற்களாகப் பட்டன. என்னை ஒரே நேரத்தில் 16-ம் நூற்றாண்டிலும், 26-ம் நூற்றாண்டிலும் வாழ்பவளாக ஆக்கின. என்னை நானே தள்ளியிருந்து காணச்செய்தன.

பள்ளி இறுதியில் நான் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றேன். உயர்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், நான் பிடிவாதமாக ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அது என் வாசிப்பின் வழிகளை அகலத் திறந்தன. தேர்ந்தெடுத்தது ஆங்கில இலக்கியம் என்பதால் இயல்பிலேயே உலக இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. ரஷ்ய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கிய நூல்கள் எனக்கு உலக அரசியல் குறித்த, மனித மனங்களின் அடுக்குகள் குறித்த பார்வையை அளித்தது. அப்போதே கிடைத்த நீட்சே, ஃபூக்கோ, சார்த்ர், மார்க்ஸ் போன்ற தத்துவவியலாளர்களின் அறிமுகம் எனது ஆழ்ந்த வாசிப்புக்குப் பெருமளவில் கைகொடுத்தன. என்னைப் பொறுத்தவரை புத்தகங்களை நமக்கு அறிமுகம்செய்வது இன்னொரு புத்தகம்தான். அவையே ஒரு சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கண்ணியையும் கோர்க்கின்றன.

புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்கள் எங்கிருந்து தொடங்குவது என்று கேட்கிறார்கள். அது என்னைக் குழம்பச்செய்யும் கேள்வி. வாசிப்பு என்பது ஒரு செடியைப் படிப்படியாக வளரச்செய்யும் முயற்சி. பலவற்றையும் படித்து நமக்கான புத்தகம் எதுவென கண்டுபிடித்துக்கொள்வது ஒரு முறை. சிறந்த ஆசிரியர்கள் மூலமாக அடையாளம் காண்பது இன்னொரு முறை. இந்த வாசிப்பே எழுதுவதற்கான் உந்துதல்களைத் தந்தன. நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போதே என் பேராசிரியர்களின் முயற்சியால் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. என் மனம் கவிதையின் வழியாகவே சிந்திக்கிறது, கவிதையின் வழியாகவே வாழ்கிறது என்று தோன்றுகிறது. எனது வாசிப்புதான் எனது வெளிச்சமாக உள்ளது. அதுதான் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறது. இப்போது மார்க்ஸியம், திராவிடம் சார்ந்த எழுத்துகள் பெரிதும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன.

அறிவுக்காக வாழ்பவர்களை நான் நேசிக்கிறேன். அது முகத்தில் இயல்பாகவே ஒளியைக் கூட்டிவிடுகிறது.

செலீனா ஹஸ்மா