ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமா!

தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பை அவர் ரஷ்ய அதிபர் முன்னிலையில் நேற்று (15.01.20) வெளியிட்டார்.

ரஷ்ய அரசியலமைப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ”இந்தத் திட்டங்கள் குறித்து குடிமக்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். பொதுக்கருத்தின் அடிப்படையிலேயே நம்மால் ஒரு வளமான நாட்டை உருவாக்க இயலும். இந்த மாற்றங்கள் ஒரு புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும்” என்றார்.

இந்நிலையில் ரஷ்ய பிரதமரான டிமிட்ரி மெத்வதேவ் அதிபர் புதினுடன் தொலைக்காட்சியில் தோன்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தையும் புதினிடம் வழங்கினார்.

இந்த திடீர் முடிவு குறித்து அவர் கூறுகையில், “அரசியலமைப்பு மாற்றங்களை அதிபர் புதின் நிறைவேற்ற இடம் கொடுத்து இந்த அமைச்சரவை ராஜினாமா செய்கிறது” என்றார்.

டிமிட்ரியின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்த அதிபர் புதின், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் இருக்குமாறு டிமிட்ரியிடம் கேட்டுக் கொண்டார்.