குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாருமில்லை!

குழந்தைகளின் உலகம் குதூகலத்தை, கொண்டாட்டத்தை, உற்சாகத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரதிபலிக்கக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுடைய உலகுக்குள் நவீன விஞ்ஞானம் நுழைந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டது. பயணத்தின்போது ஒரே ஒரு செல்பேசிதான் இருக்கிறது என்றால், குழந்தைகள் ஒரே இருக்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளுக்கொரு செல்பேசிகள் இருந்தால் தனித்தனி உலகுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். முன்பு, கதைகளாலும் விளையாட்டுகளாலும் இணைந்திருந்த குழந்தைகளின் உலகம், இப்போது செல்பேசிகளால் நிலைகுலைந்திருக்கிறது.

வீடுகளில் இப்போது குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆட்கள் யாருமில்லை. கதை சொல்லும் நபர்கள் தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். கதை கேட்கும் சூழல் இப்போது கதை பார்க்கும் காலமாக மாறியிருக்கிறது. கதை பார்க்கும் குழந்தைகளின் உலகம் விபரீதங்கள், நிராசைகள், ஏக்கங்கள் நிரம்பியதாக மாறியிருக்கிறது. குழந்தைகளுக்கான சேனல்களில் வரும் விளம்பரங்களோ ஆபத்தான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது.

குழந்தைகளின் உலகத்தில் அந்தந்தக் காலத்தில் இயற்கையாக உருவாகும் அனுபவத்தை உருவாக்கவிடாமல் இன்றைய வீடு, பல நெருக்கடிகளைத் தருகிறது. ஊடக விளம்பரங்களால் கற்பனைகளோடும் ஆசைகளோடும் வளரும் குழந்தைகள் பொய்யான லட்சியங்களைத் தங்களது எதிர்கால வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர். இப்படியான பகல்கனவு வாழ்வில் கதை கேட்கும் சூழலுக்குச் சாத்தியமே இல்லை.

பள்ளிக்கூடங்களில் கதை கேட்கும் சூழல் சோற்றுப் பருக்கை அளவுகூட இல்லை. மதிப்பெண்கள் என்கிற எக்ஸ்பிரஸ் அவசரம் மட்டுமே அவர்களைப் புத்தகங்களோடும் ஆசிரியர்களோடும் உறவு நிலையைப் பேணச்செய்கிறது. ஆசிரியர் அதிக மதிப்பெண்களைக் குறுக்குவழியில் வாங்கித்தரும் இயந்திரம் மட்டுமே. மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆசிரியர்களிடம் மாணவர்கள் நல்ல விதமாக நடந்துகொள்கிறார்கள். மரியாதை, நம்பிக்கை என்பதெல்லாம் மதிப்பெண் உலகத்தில் கிடையாது. பொறுமை, நிதானம், மன அமைதி, சகிப்புத்தன்மை, தியாகம் என்பவை எல்லாம் இப்போது அர்த்தமற்ற சொற்களாகமாறிவிட்டன.

குழந்தைகளுக்கு வீடுகளில், பள்ளிக்கூடங்களில் கதை சொல்லுதல், கதை கேட்டல் என்பது இன்றைய உலகில் மிக அபூர்வமாகவே வாய்க்கிறது. குழந்தைகளின் கதை உலகில் சிவகார்த்திகேயன், சூர்யா, அஜித், விஜய் போன்ற நாயக பிம்பங்கள் நிறைந்திருக்கின்றனர். இன்றைய தலைமுறைக்கு 50 வருட காலத்துக்கு முன்பு, மாபெரும் லட்சியக் கதை மாந்தர்களாக இருந்த ‘இரும்புக் கை மாயாவி’ போன்ற கதைபாத்திரங்களுக்கும்கூட ரசனை அடிப்படையில் பெரிய கருத்துவேற்றுமை ஏற்பட்டுள்ளது. காமிக்ஸ், படக்கதை குறித்த அக்கறைகளெல்லாம் காணாமல்போய்விட்டன.

குழந்தைகளின் விளையாட்டுகளையும், அவர்களுடைய கதை உலகையும் நவீன காலம் அழித்துவிட்டது. கிராமம், சிறு நகரம், பெரு நகரம் என்கிற பாகுபாடு இல்லாமல் நவீன விஞ்ஞானம் தனது மாயவலைப் பின்னலில் குழந்தைகளின் பிரம்மாண்டமான உலகைக் கபளீகரம் செய்துவிட்டதற்குப் பெற்றோர்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். தாங்களே முழுமுதற் காரணம் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

வெட்கத்துடன் பதிவுசெய்ய வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. 60 வயது நிரம்பிய மனிதர்கள்தான் சிறுவர் இதழ்களை வாசிப்பதும், வாசகர் கடிதம் எழுதுவதும், சிறுவர் பாடல் பாடுவதும், சிறுவர் கதை எழுதுவதுமாகத் தங்கள் காலத்தை நகர்த்திக்கொண்டுள்ளனர். சிறுவர் இதழ்களுக்கு 60 வயதான பெரியவர்களே வாசகர்கள். சிறுவர்களெல்லாம் கதை கேட்பதை மட்டுமல்ல, புத்தக வாசிப்பையும் புறக்கணித்துவிட்டு ஓடுவது பெரும் ஏமாற்றமாக உள்ளது.