தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் அலைஸ் வேல்ஸ் அழுத்தம் ….!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார மீள் எழுர்ச்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஜெனிவா தீர்மானத்தில் வெளிமட்ட அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலைஸ் வேல்ஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளது

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தாம் அழுத்தம் கொடுப்பதாக அலைஸ் வேல்ஸ் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலைஸ் வேல்ஸ்ற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ; கொழும்பில் சந்தித்து இந்த கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதில் இலங்கை விடயத்தில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து எம்.எ.சுமந்திரன் எம்.பி கூறுகையில்,

ஜெனிவா தீர்மானம் குறித்து இதுவரை காலமாக நாம் முன்னெடுத்துவந்துள்ள அதே நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை முன்வைத்தோம். இந்த விடயத்தில் உறுப்பு நாடுகளின் அங்கத்துவத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும் கூட அவர்களின் தொடர்ச்சியான வெளிமட்ட அழுத்தங்கள் இருக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம். பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தாம் அழுத்தம் கொடுப்பதாகவும், தாம் அங்கத்துவ நாடாக இல்லாது போனாலும் தாம் வழங்கிய பிரேரணை விடயத்தில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் ஆதரவு இல்லாது அவர்கள் ஆட்சியை அமைத்தாலும் தமிழ் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், பொருளாதார மீள் எழுர்ச்சி போன்ற விடயங்களில் எவ்வாறு ; கையாள்வது என்பது குறித்தும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பு எந்த விதத்தில் அமையும் என்ற காரணிகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டது.

நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதுணையாக இருப்பதுடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு தாம் அழுத்தம் கொடுப்பதாக எமக்கு அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளனர் என பேச்சுவர்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவித்தார்.