மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை டேலிலா ஜகுபோவிச் 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-6 என பின்தங்கிய நிலையில் காற்று மாசு காரணமாக இருமலால் அவதிப்பட்டு டென்னிஸ் கோர்ட்டில் நிலைகுலைந்தார்.
அவர் கைத்தாங்களாக கோர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இதனால் ஸ்டெஃபானி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் கனடாவைச் சேர்ந்த பவுச்சார்டு சீனாவின் யு சியாவோடி-யை எதிர்கொண்டார். இதில் பவுச்சார்டு இரண்டு செட்கள் முடிவில் 4-6, 7-6 என சமநிலையில் இருந்தபோது மார்பில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
அதன்பின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 6-1 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இன்று நடக்க இருந்த சில பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.