யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது.
அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது…
அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து (2020) யாழ்ப்பாணத்தில் வாழத் தீர்மானித்து இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், அவர்கள் தங்கள் ஊரை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு கொஞ்சமும் விருப்பமில்லாத மனநிலையுடன்தான் காணப்படுகின்றார்கள்.
வேலனை, புங்குடுதீவு, நயினாதீவு, காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றி அமைந்து உள்ள தீவுகள் ஆகும்.
இவற்றில் வேலனை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, காரைநகர், மண்டைதீவு ஆகிய தீவுகளுக்கு தரைவழித் தொடர்புகள் உள்ளன.
தீவகப் பகுதிகளில் நெடுந்தீவு, காரைநகர் என்பன தனிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ‘தீவகம் வடக்கு’ என்ற பெயரில், எழுவைதீவு, அனலைதீவு என்பன ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துடனும் ‘தீவகம் தெற்கு’ என்ற பெயரில், புங்குடுதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் வேலனை பிரதேச செயலகத்துடனும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக நெடுந்தீவு, காரைநகர், வேலனை, ஊர்காவற்றுறை என தீவகப்பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் யாழ். மாவட்டத்தில் உள்ளன.
நெடுந்தீவில் 4,587 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 10,682 பேரும் வேலனைப் பிரிவில் 16,396 பேரும் ஊர்காவற்றுறை பிரிவில் 10,259 பேரும் என, இந்த நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 41,924 பேர் மொத்தமாக வாழ்ந்து வருகின்றனர்.
கிராம சேவகப் பிரிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் J/01 எனத் தொடங்குகின்ற பிரிவு, நெடுந்தீவு மேற்கு கிராம சேவகப் பிரிவையே குறிக்கின்றது. மொத்தமாக, J/01 தொடக்கம் J/48 வரை, 48 கிராம சேவகப் பிரிவுகளாகத் தீவகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
1990 இல் ஆரம்பித்த இரண்டாம் கட்ட ஈழப்போருடன், 1990களின் இறுதிக்காலம், 1991களின் ஆரம்பக்கால இடப்பெயர்வுகளுடன் தீவகம் வெறிச்சோடியது.
முதற்கட்டமாக, அப்பகுதி மக்கள் யாழ். நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதன் பின்னரான காலங்களில், ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள் (1995) மற்றும் பிற காரணங்களால் வன்னி, கொழும்பு. வெளிநாடுகள் எனப் புலம்பெயர் அவல வாழ்வு தொடர்ந்தது.
இவ்வாறாக, அன்று இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த பல ‘இலட்சனங்கள்’ பொருந்திய மண்ணில், இன்று வெறும் 40,000 மக்கள் தொகையினரே வாழ்ந்து வருகின்றார்கள். தீவுப்பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமானோர், புலம்பெயர்ந்த நாடுகளில், சிறப்பான வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால், தங்கள் மண்ணில் வாழ வேண்டும் என்ற எண்ணங்களுடன், தீவுப்பகுதிகளில் மீளக் குடியேறிய மக்கள், மீளவும் யாழ்ப்பாணம் நோக்கிச் சிறுகச் சிறுக நகருகின்ற நிலைமை தொடருகின்றது.
இன்று, தீவகத்தில் மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள், வீதி அபிவிருத்திகள், கட்டுமான வசதிகள் ஆகியன, ஓரளவு திருப்திகரமான நிலைமையில் உள்ளன.
ஆனால், நீர், மருத்துவம், கல்வி போன்ற வசதிகள், இன்னமும் திருப்தியற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகின்றன. வரட்சியான காலங்களில், நீர் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாலும், தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக, யாழ். நோக்கி இடம்பெயர்கின்ற நிலை காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 12 வலயக் கல்விப் பணிமனைகளில் ஐந்து வலயக் கல்விப் பணிமனைகள், யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வருகின்றன. அவை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், தீவகம் என வகுக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், யாழ். வலயத்தில் நான்கு, தென்மராட்சி வலயத்தில் ஒன்று, வடமராட்சி வலயத்தில் ஒன்று, வலிகாமம் வலயத்தில் ஒன்று என, மொத்தமாக ஏழு தேசியப் பாடசாலைகள், யாழ். மாவட்டத்தில் அமைந்து உள்ளன. ஆனால், தேசியப் பாடசாலை ஒன்று கூட அற்ற வலயமாக, தீவக வலயம் உள்ளது.
தேசியப் பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல், கல்விசாரா செயற்பாடுகள் திருப்தியாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் உள்ளதோ இல்லையோ என்பதற்கு அப்பால், தேசியப் பாடசாலை ஒன்று கூட, எமது வலயத்தில் இல்லையே என்ற மனக்குமுறல், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் உள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இதேவேளை, யாழ். வலயத்தில் 12, தென்மராட்சி வலயத்தில் ஒன்பது, வடமராட்சி வலயத்தில் ஆறு, வலிகாமம் வலயத்தில் ஏழு, தீவக வலயத்தில் 13 பாடசாலைகள், மாணவர் பற்றாக்குறை, இதர காரணங்களால் இயங்காத நிலையில் உள்ளன. அத்துடன் தீவக வலயத்திலேயே பல பாடசாலைகள், மிகக் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.
அடுத்து, 64 பாடசாலைகளைத் தன்னகத்தே கொண்ட தீவக வலயத்தில், இரு மொழி மூலப் பாடசாலைகள் அதாவது, தமிழ், ஆங்கில மொழிகளில் கல்வியை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஒன்றுமே இல்லை.
இந்நிலையில், தீவுப் பகுதியில் வாழும் ஒரு மாணவர், ஆங்கில மொழி மூலம் கல்வி கற்க விரும்பின், யாழ்ப்பாணம் வர வேண்டும். தினசரி ஊரிலிருந்து யாழ். வந்து கற்பதோ, தற்காலிகமாக யாழில் தங்கியிருந்து கற்பதோ அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல; அனைவராலும் விரும்பப்படுவதும் அல்ல.
புலமைப் பரிசில் பரீட்சை (2018) பெறுபேறுகளின் பிரகாரம், தீவக வலயத்தில் 1,063 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி, 55 மாணவர்களே வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களாக உள்ளனர். இது வெறும் 5.17 சதவீதமாகும். இது, தென்மராட்சி வலயத்தில் 86.02 சதவீதமாகவும் வலிகாமம் வலயத்தில் 79.31 சதவீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, கல்வி சார்ந்த செயற்பாடுகளால் தோற்றம் பெற்றுள்ளதும் வெளிப்படையாகத் தெரியாததுமான புதுவகை இடப்பெயர்வால் தீவகம் தனது மக்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது. ஊரில், முன்வீட்டுக்காரப்பிள்ளை சிறந்த கல்வி பெற எனக் கூறி, யாழ். நகர் செல்கையில், எங்களாலும் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே பலர் தீவகக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.
செல்வந்தக் குடும்பங்களால் யாழ். நகரில் புதிதாக வீட்டைக் கொள்வனவு செய்யவோ பெரும்தொகைப் பணத்தை முற்பணமாகவும் வாடகையாகவும் செலுத்தவோ முடியும். ஆனால், ஒரு சராசரிக் குடும்பத்தால், யாழ். நகரில் வாடகைகூடச் செலுத்தி, வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இத்தனைக்கும் ஊரில், பத்துப் பரப்புக் காணி; அதற்குள் அரண்மனை போன்ற வீடு; காணியைச் சுற்றிவர பயன்தரு மரங்களும் தோட்டங்களும் என, என்பவற்றை இழந்து, ‘ஐயோ’ என்றால், உடனே ஓடி வரும் அயலவனை மறந்து, இன்னும் பலவற்றைத் துறந்து, பட்டணம் செல்ல வேண்டி உள்ளது.
ஆனாலும், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, எதையும் இழக்கத் தயார் என்ற ஓர்மத்துடன் ஊரில் உள்ள காணியை விற்று, வீட்டை விற்று, நகை நட்டுகளை விற்று, வங்கி, தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, இன்று வாழ்நாள் கடனாளிகளாக பலர் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள்.
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். ஆனால், இன்று தீவகத்தில் மக்கள் இல்லாத பகுதிகளிலும் கோபுரங்களைக் கொண்ட பல கோவில்கள் உள்ளன. தீவுப்பகுதியைச் சேர்ந்த பலர், அரச உயர் அதிகாரிகளாக உள்ளனர். தீவகப்பகுதியைச் சேர்ந்த பெண்மணியே, கடந்த அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்கினார். ஆனாலும், கல்வி நடவடிக்கைகளில், ஏனோ தீவகம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
“எங்களுக்குக் கல்வி வேண்டும்; அதேநேரம், எங்கள் முகவரியையும் தொலைக்(இழக்)காமல் வாழ வேண்டும்” என்பதுவே தீவக மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது. ஆகவே, நாம் அனைவரும் இது தொடர்பில் சற்று ஆழமாகச் சிந்தித்து, செயலில் இறங்குவோம்; தனியாக அல்ல, அணியாகவே ஆகும்.
காரை துர்க்கா