பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு ஆகிய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.
ஒஸ்ரேலியா – விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் திரு. வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை திருமதி கமலராணி தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. மகேந்திரம் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு வைத்திய கலாநிதி திரு. ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கேணல் ராயு அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி சுதர்சினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தியாகதீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து இதுவரை காலமும் தாயக விடுதலைப் போரில் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் இலங்கை இந்தியப் படைகளாலும் இரண்டகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம்செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வசந்தன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனதுரையில் “தியாகி திலீபன்அண்ணா ஈகைச்சாவடைந்து இருபத்தொன்பதுஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை குறிப்பிட்டு அவை இன்னமும் நிறைவேறாமல் அந்தக் கோரிக்கைகளுக்காக இன்றும் நாம் போராடவேண்டிய நிலையிலுள்ளோம்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து தியாகி திலீபனின் நினைவு சுமந்த பாடல் ஒன்றுக்கான வணக்க நடனம் இடம்பெற்றது. இந்த வணக்க நடனத்தை நடனாலயாப் பள்ளி மாணவி செல்வி சரணா ஜெயரூபன் அவர்கள் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த பதிவுகளும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்விலிருந்து முக்கிய பதிவுகளையும் கொண்டதாக சமகாலத்திற்கேற்றவகையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட காணொளி பதிவு ஒன்று அகலத்திரையில் திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு நிகழ்வான கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்ட தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்து உருவாக்கப்பட்ட பாடல் உள்ளிட்ட மற்றும் தாயகப்பாடல்கள் என்பன இந்நிகழ்வில் இடம்பெற்றன.
மெல்பேர்ண் உள்ளூர்க் கலைஞர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வை நிகழ்த்தினார்கள். இக்கலைமாலை நிகழ்வை திரு. டொமினிக் சந்தியாபிள்ளை மற்றும் திரு. றொகான் அலோசியஸ் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள்.
கலைமாலை நிகழ்வில் பங்கெடுத்த அனைத்துக் கலைஞர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் உறுதிமொழியுடன் இரவு 8.00 மணியளவில் தியாகதீபம் கலைமாலை – 2016 நிகழ்வுகள் உணர்வுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Eelamurasu Australia Online News Portal





