லங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பே தீர்வு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்தப்படும் எந்தத் தீர்வும் தீர்வாகாது என்பதற்கு இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமே சான்றாக அமைதுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்களத் தலைவர்களிடையே இந்தியா மீது பற்றோ, பரிவோ இல்லை என்பதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவிற்கு உச்ச அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவிற்கு இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஏனைய மாநிலங்களுக்கு விளக்குமாறும் தமிழக மக்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.