ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது.

ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன.

அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சதிக் கோட்பாடுகளை கிளப்பி விடுகின்றன.

அந்தவகையில் பார்த்தால், தற்போதைய ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான முறுகல்களின் விதையானது கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதான தனது பிரசாரங்களிலேயே ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதைத்து விட்டார் என்றால் மிகையாகாது.

தனது பிரசார உறுதிமொழியின்படி ஈரானுடன் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, தனக்கு முந்தைய ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவை விலக்கி பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்ததன் மூலம் ஈரானை ஆத்திரமூட்டும் கைங்கரியத்தை தொடக்கினார் ஜனாதிபதி ட்ரம்ப்.

இவ்வாறானதாக ஆரம்பித்த ஐக்கிய அமெரிக்க – ஈரான் முறுகலானது, ஈரான் மீதான மேலதிக பொருளாதாரத் தடைகள், ஐக்கிய அமெரிக்காவின் நட்புறவு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள், சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலால் வளர்ந்திருந்தது.

இந்நிலையில், அண்மைய ஐக்கிய அமெரிக்க – ஈரான் முறுகல்களானது ஈரான் ஆதரவு ஷியாப் போராளிக் குழுவான கடெய்ப் ஹிஸ்புல்லாவால் ஈராக்கியத் தலைநகர் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் றொக்கெட் தாக்குதலில் ஐக்கிய அமெரிக்க சிவில் பணியாளரொருவர் கொல்லப்பட்டதுடன் ஆரம்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஈராக்கில் தாக்குதல்களை நடத்திய ஐக்கிய அமெரிக்கா, குறித்த குழுவின் 25 போராளிகள் வரையில் கொன்றிருந்தது. இதையடுத்து ஈரானின் ஆதரவு பெற்ற ஷியாக் குழுக்கள், பக்தாத்திலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கியிருந்தன.

இந்நிலையில், பக்தாத்தில் ஈரானின் சக்திவாய்ந்த இரண்டாவது நபராகக் கருதப்படுகின்ற குவாசிம் சொலெய்மானியை ஐக்கிய அமெரிக்கா கொன்றதையடுத்தே ஐக்கிய அமெரிக்க – ஈரான் முறுகல்களில் தனது நிரம்பல் புள்ளியை ஈரான் அடைந்திருந்தது.

ஏனெனில், ஈரானுக்கு வெளியே குறிப்பாக சிரியா, லெபனான், ஈராக், யேமனில் அதன் பிரசன்னத்தை உணரச் செய்து மத்திய கிழக்கில் தாக்கம் செலுத்தக்கூடிய சக்தியாக ஈரானை உருவாக்கியதன் தந்தையாக ஈரானிய புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குவாட்ஸ் படையின் முன்னாள் தளபதியான சொலெய்மானி காணப்பட்டிருந்தார்.

அந்தவகையில், சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து பல தரப்புகளின் பிரசன்னம் அங்கிருந்து அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியபோதும், ஐக்கிய அமெரிக்கா தான் விரும்பியதை அங்கு நிறைவேற்ற முடியாமல் போனதை ரஷ்யாவின் கூட்டிணைவுடன் தடுத்தவராக சொலெய்மானி காணப்படுகின்றார்.

தவிர, மத்திய கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் பிரசன்னம் இருக்கக் கூடாது என்ற ஈரானின் கொள்கைக்கு உயிர்ப்பூட்டி ஐக்கிய அமெரிக்காவுக்கு மிகவும் தலைவலியாக இருந்த சொலெய்மானியைக் கொன்றதன் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றியாளராக மாறினாரா என்றால் அது கேள்விக்குறியே.

ஏனெனில், சொலெய்மானியின் கொலையானது அல்-கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின் லேடன் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியுடையதைப் போன்றது அல்ல. ஒரு நாட்டின் தளபதியே சொலெய்மானி. ஆகவே, சொலெய்மானியின் கொலைக்கு ஈரானிடமிருந்து உடனடியாக அல்ல எனினும் நிச்சயமாக எதிர்பார்க்காத தருணங்களில் எதிர்வினைகள் இருக்கும்.

ஆனாலும், சொந்த நாட்டில் செனட்டில் பதவி நீக்க விசாரணைகளை எதிர்கொள்ளப் போகும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, இவ்வாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்படும் வாய்ப்புகளை சொலெய்மானி கொல்லப்பட்டது வழங்கியிருக்கும். அதை எவரும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், சொலெய்மானி கொல்லப்பட்டதற்கான பதிலடியாக ஈராக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியிருந்தது. இதில், ஐக்கிய அமெரிக்கர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், ஈரான் சொலெய்மானியின் மரணத்துக்கு பதிலடி வழங்கினால் ஈரனின் 52 நிலைகள் தாக்கப்படும் என எச்சரித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்கர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்ததுடன், உடனடியாகப் பதில் தாக்குதல்கள் எதையும் அறிவித்திருக்கவில்லை. வெறுமனவே பொருளாதாரத் தடைகளை ஆரம்பித்திருந்தார்.

ஆகவே, சாதாரணமாக ஜனாதிபதி ட்ரம்ப்பிடமிருந்து போருக்கான சமிக்ஞைகள் வெளிப்படும் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் தன்னை ஒரு போர் விரும்பியாக அன்றி சமாதான நாயகனாக அவர் உருவகித்து தளம்பல் நிலையிலிருக்கும் தனது ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ அழிப்பதில் சொலெய்மானியின் பங்கு இருந்திருந்த நிலையில், ஈரானை அவ்விடயத்தில் மெச்சியிருந்த ட்ரம்ப், கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே சொலெய்மானியை இல்லாமற் செய்தது முதல் தன்னை சமாதான நாயகனாக உருவகித்தது வரை இந்த ஐக்கிய அமெரிக்க – ஈரான் முறுகல்களில் வெற்றியாளராக ஜனாதிபதி ட்ரம்ப்பே இருக்கின்றார்.

எவ்வாறாயினும், ஈரானின் பதிலடியானது ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மாத்திரமே என்று நம்பும்படியாக எவருமில்லை. ஆக, எதிர்பார்க்காத சமயங்களில், எதிர்பார்க்காத இடங்களில் ஈரான் தாக்கலாம்.

ஆயினும், ஐக்கிய அமெரிக்க இலக்குகளைத் தாக்க வேண்டாம் என தமது சார்பு ஷியாக் குழுக்களுக்கு ஈராக்கில் ஈரான் உத்தரவிட்டதாக ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தமை உண்மையானால் தற்போது உடனடியான யுத்தமொன்று தடுக்கப்பட்டிருக்கின்றது என நம்பலாம்.

யுத்தமொன்று தடுக்கப்படுவதுதான் தற்போது பெரும்பாலோனோரால் விரும்பப்படுவதாக இருக்கின்றது. ஏனெனில், யுத்தத்தால் எப்போதுமே இழப்புகளே இருக்கின்றன. அதுவும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவமான இருக்கின்ற ஐக்கிய அமெரிக்காவுடனான ஈரானின் மோதல் நிச்சயம் பேரிழப்பானதாகவே விளங்கும். ஆக, யுத்தம் தடுக்கப்பட்டது என்ற செய்தியானது அடிமட்ட ஐக்கிய அமெரிக்க, ஈரான் படைவீரர்களுக்கு நிச்சயம் நிம்மதியை வழங்கியிருக்கும்.

இந்நிலையில், இத்துணை முறுகல்களால் மசகெண்ணையின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதன் உற்பத்தியாளர்கள் மேலதிக இலாபம் பார்ப்பார்கள் என்ற நிலையில், மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஐக்கிய அமெரிக்கா, அதன்நட்பு நாடான சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்றவை இருக்கின்றமை சிந்திக்க வேண்டிய விடயமாகும்.