மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலைமைக்குள் தள்ளியுள்ளது. தனி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அவர் பெரும்பான்மை இன மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே தமது தலையாய கடமை என அந்த விளக்க உரையில் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும் என்ற தனது அரசியல் சித்தாந்த தீர்மானத்தை அவர் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்தக் கொள்கை நிலைப்பாட்டில் நாட்டிலுள்ள சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புக்களோ அல்லது அவர்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் நலன்களோ கவனத்திற்கொள்ளப்படவில்லை.
தனக்கு வாக்களித்த மக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவையைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்ட அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலை அவர்கள் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இனவாத அரசியலை இந்த நாட்டின் அரசியல்வாதிகள் கைவிட்டு, நாட்டின் சுபீட்சத்துக்காகத் தம்முடன் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு என்பதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் கொள்கை விளக்க உரையின் தலைப்பு. இலங்கையை சுபீட்சமுள்ள நாடாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அந்தத் தலைப்பின் வெளிப்படையான இலக்காகத் தோன்றுகின்றது. ஆனால் அந்த சுபீட்சத்தின் நோக்கு பெரும்பான்மை பலத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் மேலாண்மை நிலைப்பாட்டின் ஆழமான அம்சங்களையே உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றது.
ஏமாற்றமும் கவலையும்
நாட்டின் 75 வீத பெரும்பான்மையைக் கொண்டுள்ள சிங்கள மக்களின் வாக்குப் பலத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் அதிபர் என்ற வகையில் அவர் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் அரசியல், பொருளாதார, சமய, சமூக, வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
ஜனாதிபதி பதவி என்பது முழு நாட்டையும் பிரதிபலிக்கின்ற ஒரு பதவி. நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பானதும், அவர்களை சுபீட்சத்தை நோக்கி வழிநடத்துகின்ற பாரிய அரசியல் பொறுப்பைக் கொண்ட தலைமையுமாகும்.
யாருடைய வாக்குப் பலம் ஒருவரை ஜனாதிபதியாகச் செய்தது என்பது தேர்தல் நிலையில் வரையறைக்கு உட்பட்டது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் முழு நாட்டினதும், நாட்டின் அனைத்து மக்களினதும் நன்மை தீமைகளுக்குப் பொறுப்பானவராகின்றார்.
ஆகவே, உள்ளூராட்சி சபைகளைப் போன்று அல்லது மாகாண சபையைப் போன்று குறிப்பிட்ட ஒரு குறுகிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாராராகிய மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியைப் போன்று அந்த மக்களுக்கு மாத்திரமே உரித்துடையவர் என்ற வரையறைக்குள் முடங்கிவிட முடியாது.
ஆனால் அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு என்ற தலைப்பிலான கொள்கை நிலைப்பாட்டுப் பிரகடனம் தேசிய மட்டம் என்ற பரந்து விரிந்த எல்லைப் பரப்பைத் தொட்டு நிற்க முயற்சிக்கவில்லை. அது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற ஓர் இனம் சார்ந்ததாகவும், அந்த இனத்தவர்களின் ஏகபோக பிரதிநிதித்துவத்தின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டிருக்கின்றது.
இந்த ஜனநாயகப் பெரும்பான்மை மேலாதிக்க நிலைமையானது, நாட்டின் சிறுபான்மை இன மக்களை ஏமாற்றத்திற்கும் அவர்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
பொறுப்பான செயற்பாடுகள் இடம்பெறவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை அறிவித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெறுமேயானால் நாட்டின் நிலைமைகள் சுபீட்சமுடையதாக இருக்கமாட்டாது என்ற எதிர்பார்ப்பும் எதிர் உணர்வு நிலையுமே சிறுபான்மை இன மக்கள் மனங்களில் மேலோங்கி இருந்தது. ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
எனவே, அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருக்கத்தான் செய்தது. எனவே, அவர்களுடைய தேர்தல் கால அச்ச நிலையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகளும் மாற்றம் பெற்றிருக்கின்றன.
அபிவிருத்தியே அரசாங்கத்தின் முழு நோக்கம் என்றும் அபிவிருத்தியின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் புதிய அரசு பதவியேற்றதும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் போன்ற விடயங்களைக் கைவிட்டு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், அதற்கான விடயங்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்களும் இடம்பெறமாட்டாது என்ற நிலைமையும் கோடிகாட்டப்பட்டது. அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்ற நிலைப்பாடும் வெளியிடப்பட்டது. அரசியல் வழியில் பேச்சுவார்த்தைகளின் மூலம் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் விளைவாகவே ஆயுத மோதல்கள் வெடித்தன. யுத்த நிலைமை மூன்று தசாப்தங்களுக்குத் தொடர்ந்து நிலவியது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்திற்கு முடிவு கண்டதன் பின்னர் 6 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முயற்சிக்கவில்லை. யுத்த மோதல்களினாலும், யுத்தச் சூழ்நிலை காரணமாகவும் எழுந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளையும் அந்த அரசு மேற்கொள்ளவில்லை.
அதிகூடிய மேலாண்மை நிலைமை
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். அமைதியாக வாழலாம் என எதிர்பார்த்திருந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவ மேலாதிக்கமும், நெருக்கடிகளுமே வெகுமதியாகக் கிடைத்தன. யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கும், அழிந்து நிர்மூலமாகிப்போன அவர்களுடைய வாழ்க்கை சுபீட்சமடைவதற்கும் இதயசுத்தியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
சுயலாப அரசியல் நோக்கம் கொண்ட ஆட்சிப் போக்கும், பேரின நன்மை சார்ந்த வேலைத்திட்டங்களுமே முனைப்பு பெற்றிருந்தன. உட்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளுக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் உரிமைகளின் உறுதிப்படுத்தலுடன் கூடிய புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
புனர்வாழ்வுச் செயற்பாடுகளில் அடிப்படை உரிமைகளை இழக்கின்ற நிலைமையும், ஏற்கனவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவழியிலான நிவாரணத்தைப் பெற முடியாத நிலைமையுமே நிலவின. வாழ்க்கைக்கும் வாழ்வதற்கான உரிமைகளுக்கும் மட்டுமன்றி உரிமை மறுப்புகளுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமான வாழ்க்கை நிலைமைகளுக்கே அந்த மக்கள் ஆளாக்கப்பட்டிருந்தார்கள்.
யுத்தத்தில் கிடைத்த வெற்றியை முதலீடாகக் கொண்ட ஆட்சி எதேச்சதிகாரப் போக்கில் நெறிபிறழ்ந்ததன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து பொதுத் தேர்தலிலும் தோல்வியடைய நேர்ந்தது
ஜனநாயகத்தைப் பாதுகாத்து நாட்டில் நல்லாட்சியை நிலவச் செய்வதாக உறுதியளித்து ஆட்சி நடத்திய நல்லாட்சி அரசாங்கமும் திசைமாறி திக்குமுக்காடி இறுதியில் 2019 ஜனாதிபதி தேர்தலில் மண்கவ்வ நேர்ந்தது. இந்தத் தேர்தலின் தோல்வி என்பது மிக மோசமானதொரு அரசியல் பின்னடைவாகவே பதிவாகியுள்ளது.
மறுபுறத்தில் இந்தத் தேர்தலின் வெற்றியானது வரலாற்றிலேயே அதிகூடிய பெரும்பான்மையான 13 லட்சம் அதிகப்படியான வாக்குகளைக் கொண்டதாக சிறப்பு பெற்றிருக்கின்றது. ஆனால் அந்தச் சிறப்பு புதிய ஆட்சியின் போக்கிலும், புதிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டிலும் மிளிரவில்லை. மாறாக 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த மேலாண்மை மிக்க ஆட்சியின் தொடர்ச்சியாகவும், அதிலும் பார்க்க அதிகூடிய மேலாதிக்கத் தன்மை கொண்டதாகவுமே தோற்றம் கொண்டிருக்கின்றது.
அரசியல் ரீதியான அச்ச நிலை
ஜனாதிபதி கோத்தபாயவின் தலைமையிலான அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கருதுகின்றது. அவ்வாறு கருத வேண்டிய நிலையிலேயே ஜனாதிபதியினதும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினதும் கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன.
அரசியல் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல. பௌத்த மேலாதிக்க ஆட்சிக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை அளிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக வெளியாகி உள்ள தகவல்களையடுத்து, தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குறிக்கு உள்ளாக்குகின்ற போக்கையே அரசு கடைப்பிடிக்கின்றது என்ற கருத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதம் என்பனவற்றுக்கு முதலிடம் என்ற அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடு தமிழ் அரசியல் தலைவர்களை நிலைதடுமாறச் செய்துள்ளது. அரசியல் தீர்வு காணவும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அரசாங்க தரப்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அத்தகைய இணக்கப்பாடான நிலைமைக்கு இடம்கொடுக்காத நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவது அவசியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்திய அதேவேகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அதற்கான சாத்தியமில்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை இலங்கை– இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆட்சி நடத்திய அரசுகள் வழங்கவே இல்லை. சட்ட ரீதியாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதற்கும், இயலுமானால் அந்த திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்வதற்குமான நடவடிக்கைகளிலேயே ஆட்சியாளர்கள் அக்கறையுடன் ஈடுபட்டிருந்தனர்.
இதனையே அதிகாரபூர்வமாக ஜனாதிபதி கோத்தபாயவும் பின்பற்றியுள்ளார். ஒற்றை ஆட்சியைப் பேணிப் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ள அவர் மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது ஆபத்தான நிலைமைகளை உருவாக்கும் என்ற கருதுகோளை மாற்ற முடியாத கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புக்கள் இருந்தன
முன்னைய அரசுகள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கும், அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாடுவதற்கும் உரிய இணக்கமான போக்கை வெளிப்படுத்தி இருந்தன. அரசியல் தீர்வு காணும் வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து கலந்துரையாடுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன. அதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு வருடமாக நடத்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை அரசாங்கத்துடன் நடத்தப்படவில்லை என அதிரடியாக மறுத்துரைக்கப்பட்டது.
அவ்வாறு இருந்த போதிலும், அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தலாம். பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். எப்படியாவது ஓர் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்ற நிலைமைக்கான அரசியல் வெளி காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சியில் அத்தகைய இடைவெளியைக் காண முடியவில்லை.
ஒற்றை ஆட்சியே இறுக்கமாகப் பேணப்படும். பௌத்த மதத்திற்கான முன்னுரிமையும் முதன்மை நிலைமையும் தளர்ச்சியின்றி முன்னெடுக்கப்படும். தேசிய பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும். அபிவிருத்திக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படும் என்று அரசாங்கம் தீவிரமாகக் கவனம் செலுத்துகின்ற விடயங்கள் குறித்து பட்டியலிட்டு தெளிவாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பாராளுமன்ற அமர்வின்போது, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஆர்வமாகவோ கரிசனையுடனோ கலந்துரையாடவில்லை. மாறாக தவிர்த்துச் செல்கின்ற ஒரு போக்கிலேயே அவருடைய செயற்பாடு அமைந்திருந்தது.
சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களை ஒரு பொருட்டாகவே கருதாத ஒரு போக்கைப் புதிய அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதையே இது வெளிப்படுத்தி உள்ளது. தனக்குக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களை அவர் உணர்ந்து கொண்டதாகவோ அல்லது ஏற்றுக்கொண்டதாகவோ தெரியாத வகையிலேயே நடந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இதனை புதிய அரசு தமிழ் மக்கள் தரப்புடன் கொண்டுள்ள வேண்டா வெறுப்பான போக்கின் அடையாளமாகவே கருத வேண்டியுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் தெரிவிக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டது.
தந்திரோபாய செயற்பாடே தேவை
ஒற்றை ஆட்சியை இறுக்கமாக வலியுறுத்தி பௌத்தத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் முதலிடம் வழங்கப்படும் என அழுத்தி உரைத்து, நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கு பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஆணித்தரமாகத் தமது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்ததாக என்ன செய்யப் போகின்றது எத்தகைய நிலைப்பாட்டை முன்னெடுக்கப் போகின்றது என்பதை உடனடியாக வெளிப்படுத்தவில்லை.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் அம்சங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுக்குழுவினருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜப க் ஷ தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சியின் கீழேயானாலும், மாகாண சபை ஆட்சி முறைமையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சிக்கான ஆட்சி முறைமை குறித்து பேச்சுக்கள் நடத்தி ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காகக் காணப்பட்ட வாய்ப்பையும் இல்லாமல் செய்வதாகவே ஜனாதிபதியின் இந்த கருத்து அமைந்துள்ளது.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்போது சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ளவும் பொலிஸ் சேவையை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுப்பதற்கான நேரடி மேற்பார்வைகளை இலகுவாகச் செய்யவும் முடியும் என்று பலரும் கருதுகின்றார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் அரசு கடும்போக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதுடன் இது போன்ற விடயங்களில் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது.
ஆகவே பல வழிகளிலும் இறுக்கமான ஒத்திசையாத நிலைப்பாட்டையும் போக்கையும் கடைப்பிடித்து, சிறுபான்மை இன மக்களை கருத்திற் கொள்ளாத அரசாங்கத்துடன் எந்த வகையில் தமிழ்த்தரப்பு அணுகு முறைகளை மேற்கொள்ளப் போகின்றது என்று தெரியவில்லை.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள நெருக்கடியான அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்பினர் தங்களுக்குள் கூடி ஆராய்வதற்கும் நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்துச் சிந்திப்பதற்கும் இதுவரையிலும் முற்படவில்லை.
ஜனாதிபதி பதவியை ஏற்ற தினத்தன்றே சிறுபான்மை இன மக்களைப் புறமொதுக்குகின்ற போக்கு குறித்த கருத்துக்களை ஜனாதிபதி வெளியிட்டபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவருடைய பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையின் பின்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை கடும் போக்கில் அமைந்துள்ளதையடுத்து தமிழ்த்தரப்பு அரசியல் ரீதியாக தனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்திருப்பதையே காண முடிகின்றது.
இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு உரிய முறையில் முகம் கொடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து தீர்க்கமாகச் சிந்திக்கவும் தந்திரோபாய ரீதியில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் முற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தரப்பினர் துணிவோடும் தெளிந்த சிந்தனையோடும் நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து வலுவான நிலையில் செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசியம். கட்டாயத் தேவையும்கூட.
பி.மாணிக்கவாசகம்