நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபச்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களை கைது செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களை கைது செய்திருக்கமாட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யாது அங்கும் இங்குமாக டீல் போட்டதால் தான் இன்று கைதுகள் இடம்பெறுகின்றது.

இன்றைய அரசாங்கத்தில் நாடகங்கள் அரங்கேறுகின்றன தென்னிலங்கை மக்கள் முட்டாள்கள் இல்லை வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறான முடிவுகள் எடுப்பார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு தெரியும்.

அண்மையில் கைது செய்யப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்க வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ளார். கைது தொடர்பில் எவரும் முறைப்படியான தகவல்களை வழங்கவில்லை நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்காகவே உருவாக்கப்பட்டது. அக் கட்சியில் இருந்து சென்றவர்கள் தான் தலைமைத்துவம் வேண்டும் என்று கூறுகின்றார்கள் அவர்கள் மீண்டும் வந்தாலும் இதைத்தான் கூறுவார்கள் இன்று நாம் கூறுகின்றோம் எம்முடன் யாரும் இணையலாம் கதவு திறந்தேயுள்ளது.

ஆனால் இவர்கள் எவரும் வரமாட்டார்கள் இவர்களுக்கு தலைவர் என்று கூறுவதற்கு அல்லது தலைவர் என்று அழைப்பதற்கு விருப்பமுடையவர்கள் என்பதால் இவர்கள் வரமாட்டார்கள் இது மட்மன்றி பதவி தேவை என்பார்கள் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத் தொகுதிக்கு 7 பேர் தகுதியுடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போதுள்ளவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிருவார்கள் அப்படியாயின் ஏனையவர்களுக்கு எவ்வாறு கொடுப்பது.

இது இவ்வாறு இருக்கும்போது தமிழ் மக்களுக்கு உண்மையாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் தங்கள் நிலைகளில் இருந்து போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஏனையவர்களுடன் ஒன்றிணைத்து ஒரு கோட்டில் நின்று செயற்படுவதற்கு முன்வரவேண்டும் என்றார்.