இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது.
இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது.
சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள் மட்டத்தில் நடந்து வந்த சந்திப்புகள், கூட்டங்களில், பெரும்பாலும் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரையே அனுப்பி வந்தது.இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியானது, ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டதாக மாறியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள் மட்டத்திலான கூட்டங்களில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்பதில் சில protocol சிக்கல்கள் உள்ளன.
முப்படைகளையும் ஒருங்கிணைப்பதற்கு இந்தப் பதவி அவசியமானது என்று, 1999 கார்கில் போருக்குப் பின்னர் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த போதும், இப்போது தான் இந்தியா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது.
அதேவேளை, கடந்த 31ஆம் திகதியுடன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஓய்வுபெற்றதை அடுத்து, இராணுவத் தளபதியாக உள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போதே, சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. குறிப்பாக, அமெரிக்கா இந்த நியமனத்தைக் கடுமையாக எதிர்த்தது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் அப்போது வெளியிட்ட கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்தினால் அதிருப்தியுடன் நோக்கப்பட்டன.
நம்பகமான போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதால், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது.
அந்த எச்சரிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்ளவில்லை.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார் என்றும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், அவர் தனது பதவியின் இறுதிக்கட்டத்தில் அத்தகைய நியமனங்கள் எதையும் செய்யவில்லை.
இந்த நிலையில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஓய்வுபெற்றதை அடுத்து, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமித்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.
ஜனாதிபதியின் அதிக நம்பிக்கையைப் பெற்ற இராணுவ அதிகாரிகளில் மிக முக்கியமானவர் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா. அவர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவிக்கு பதில் கடமைக்காக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமல்ல. இந்த நியமனத்தின் மூலம், வெளிப்படுத்தியிருக்கின்ற ஒரு செய்தி இருக்கிறது.
இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடுகள், மனித உரிமைகள் அமைப்புகளுக்கு இந்த நியமனத்தின் ஊடாக சவால் விடுத்திருக்கிறார் ஜனாதிபதி.
அதுவும், அடுத்த மாதம் ஜெனீவாவில் தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை விவகாரமும், குறிப்பாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமன விவகாரமும், விவாதிக்கப்படக் கூடிய ஒரு சூழலில் தான், இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது.
இராணுவத் தளபதி பதவியில் இருந்து லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விடுவிக்கப்படாமலேயே, பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதிலிருந்து, அவரை இப்போதைக்கு இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுவிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. அதேவேளை, இப்போதைக்கு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவிக்கு வேறொருவரையும் நியமிக்கும் திட்டமும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
ஏனென்றால், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை விட சேவை மூப்புள்ள அதிகாரியான, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இருந்த போதும், அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவில்லை.அதேவேளை, 21/4 தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு கட்டமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பான பரிந்துரைகள் பல முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்குவதாகும்.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி வலுவானது. அந்தப் பதவியை உருவாக்குவதன் மூலம், படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, புலனாய்வு பரிமாற்றங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், முன்னைய அரசாங்கம் அந்தப் பதவியை உருவாக்குவதற்கிடையில், அதன் ஆயுள் முடிந்து விட்டது.
முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டங்களை பின்பற்றுவதற்கு தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தயாராக இல்லை.
அவர், பாதுகாப்பு என்ற விடயத்தில் தன்னை விட மிஞ்சிய அறிவுள்ளவர்கள் யாரும் இல்லை என்ற போக்கில் செயற்படுபவர்.
அதனை தேர்தல் பிரசாரங்களின் போது கூட வெளிப்படுத்தியிருந்தார்.முன்னைய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி உருவாக்கத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் இல்லை.
ஏனென்றால் அந்த நியமனத்தை செய்தால், அது முன்னைய அரசாங்கத்தின் அடையாளமாகத் தெரியுமே தவிர, கோத்தாபய ராஜபக் ஷவின் தனித்துவ அடையாளம் அதில் இருக்காது. எனவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்குவதற்குப் பதிலாக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் தொடக்கத்தில், 1985 நவம்பர் 2ஆம் திகதி, கூட்டு நடவடிக்கை கட்டளைத் தளபதி என்ற பதவி முதன் முதலாக உருவாக்கப்பட்டது. அப்போது, ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க நியமிக்கப்பட்டார். பின்னர் அந்தப் பதவியை, ஜெனரல் சிறில் ரணதுங்க, ஜெனரல் ஹமில்டன் வணசிங்க, எயர் மார்ஷல் வோல்டர் பெர்னாண்டோ உள்ளிட்டோர் வகித்திருந்தனர்.
1999ஆம் ஆண்டு இந்தப் பதவி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்துக்குப் பின்னர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் அதிகாரி ஜெனரல் றொஹான் தளுவத்த. அவருக்குப் பின்னர் முன்னாள் இராணுவத் தளபதிகள், கடற்படைத் தளபதிகள், விமானப்படைத் தளபதிகள் பலர் இந்தப் பதவியை வகித்து வந்துள்ளனர். போர் வெற்றிக்குப் பின்னர், 2009ஆம் ஆண்டு 35ஆவது இலக்க, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இந்தப் பதவிக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இப்போதைய அரசாங்கம், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் நோக்கம்.
அதன் பின்னர், மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதிவாய்ந்த அதிகாரிகளில் ஒருவராக கருதப்பட்டவர். இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த அவர், 2018இல் 55 வயதை எட்டிய நிலையில், ஓய்வு பெற்றார்.அவரை மீண்டும் சேவைக்கு கொண்டு வந்து பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிப்பது ஜனாதிபதியின் திட்டமாக கருதப்படுகிறது.
ஆனால், இதுவரையில் கூட்டுப் படைகளின் தளபதியாக அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்தவர்கள் அனைவருமே, முன்னாள் இராணுவத் தளபதிகளாகவோ, கடற்படை அல்லது விமானப்படைத் தளபதிகளாகவோ தான் இருந்திருக்கின்றனர். ஏனென்றால், இந்தப் பதவியானது, முப்படைகளினதும் தளபதிகளுக்கும் மேலானது.
எனவே தான், ஜெனரல், அட்மிரல், எயர் சீவ் மார்ஷல் போன்ற பதவிகளையுடைய அதிகாரிகள் தான் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், சுமேத பெரேரா, மேஜர் ஜெனரலாகவே ஓய்வு பெற்றவர். எனவே அவரை மீண்டும் பணிக்கு அழைத்து, பதவி உயர்வு கொடுத்து தான், இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டியிருக்கும்.
பாதுகாப்புச் செயலராக உள்ள, கமல் குணரத்ன மேஜர் ஜெனரல் தரத்தில் தானே இருக்கிறார். பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஏன் மேஜர் ஜெனரல் இருக்கக் கூடாது என்று வாதிட முடியாது.அது, ஒரு அரசாங்க சிவில் பதவி. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்பது ஒரு படைத்துறைப் பதவி நிலை. அங்கு, பதவி வரிசை ஒழுங்கு ஒன்று பேணப்படும். இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எதற்காக ஓய்வுபெற்றுச் சென்ற, மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை இந்தப் பதவிக்கு நியமிக்க முற்படுகிறார் ?
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, எயர் மொபைல் டிவிசன் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றிய ஒருவர். 53 ஆவது டிவிசனின் 3 ஆவது பிரிகேட் தளபதியாகவும் இருந்தவர். புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாகப் பங்கெடுத்தவர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கஜபா றெஜிமென்ட்டின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான அதிகாரிகளில் ஒருவராவார். 1983ஆம் ஆண்டு இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்ட போது முதலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் இவரும், ஒருவர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன், கஜபா றெஜிமென்டில் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
போரை நடத்திய காலங்களை விட, போருக்குப் பிந்திய காலங்களில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ‘கஜபா’க்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்.அவரது வலது, இடது கரங்களாக இருப்பவர்கள் அனைவருமே ‘கஜபா’க்கள் தான்.
தற்போது, ஜனாதிபதியாக இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷ, பாதுகாப்பு செயலராக இருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக உள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, என அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கஜபா றெஜிமெட்டை சேர்ந்தவர்கள் தான்.
அந்த வரிசையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும், கஜபா படைப்பிரிவின் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நிரந்தரமாக இந்தப் பதவிக்கு இன்னொரு ‘கஜபா’வான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இது ‘கஜபா’க்களின் காலம்.
– சுபத்ரா