அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது.
ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 77-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்சில் நடந்தது.
இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டிஸ் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த ஜோகுயின் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.
அதே போல் சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெல்வேகருக்கு வழங்கப்பட்டது. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் சிறந்த இசை மற்றும் நகைச்சுவை படமாக தேர்வாகி விருதுகளை பெற்றது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜோக்கர் படத்திற்காக ஹில்டர் குனாடோட்டிருக்கு கிடைத்துள்ளது. இது தவிர பல்வேறு பிரிவுகளில் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, குணச்சித்திர பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.