பொதுத்தேர்தலை நோக்கி நாடு நகரத் தொடங்கியுள்ள சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.
இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முன்வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது பங்காளிக் கட்சிகளுடன் ஏற்கனவே ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களைத் தொடங்கி விட்டது.
புதிய கட்சிகளை உள்வாங்குவதற்கான எந்தப் பேச்சுக்களையும் முன்னெடுக்காமலேயே, பங்காளிகளுடன் ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதில் இருந்தே, கூட்டமைப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளுக்காக காத்திருக்கவும் இல்லை, அதற்கு வழிவிடத் தயாராகவும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
அதற்கு மாற்றான அணி என்று கிளம்பியுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணி தைப்பொங்கலுக்கு முன்னதாக பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அங்கேயும், சிக்கல்கள் நீடிக்கத் தான் செய்கின்றன.
இந்தக் கூட்டணியில் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் தலைமையிலான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைக் கொண்டு வரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும், முரண்டு பிடிப்பதாக தகவல்.
இதனால், இப்போதைக்கு விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ், சிறிகாந்தா தலைமையில் புதிதாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் தமிழ் மக்கள் பேரவையும் இணைந்தே மாற்று அணி உருவாக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதிகபட்ச ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டாலும், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கக் கூடியதொரு நிலை இன்று இல்லை என்பதே நிதர்சனம்.
2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் போட்டியிட்ட போது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிகபட்சமாக 22 உறுப்பினர்களைப் பெற முடிந்தது.
அதற்குப் பின்னர் கூட்டமைப்பினால் அவ்வாறு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் ஆசன பலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இந்தமுறை கூட்டமைப்புக்கு 15 ஆசனங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் கூட்டமைப்பின் தலைவர்களுக்கே வந்து விட்டது. அண்மையில் புளொட் தலைவர் சித்தார்த்தன் இதனை உறுதி செய்திருந்தார்.
கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரியத் தொடங்கியிருப்பது இதற்கு ஒரு காரணம் என்றால், தமிழ்த் தேசிய வாக்குகள் பிரிக்கப்பட்டு, சிதறிப் போவதை இன்னொரு காரணமாக குறிப் பிடலாம்.
வடக்கில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைந்து போகக் கூடிய அச்சுறுத்தல் இல்லாவிடினும், அந்தப் பிரதிநிதித்துவம் சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் பகிரப்பட்டு விடக் கூடிய ஆபத்து உள்ளது. வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்க்கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால், தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்து போகும் ஆபத்துகள் அதிகம் உள்ளன.
அம்பாறையிலும், திருகோணமலையிலும், தமிழரின் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவர் கிடைப்பதே பெரிய விடயம் என்ற நிலை ஆகி விட்டது.
இவ்வாறான நிலையிலும் கூட, தமிழ்க் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிடத் தயாராக இல்லை. தமது தனிப்பட்ட செல்வாக்கை நிலைநாட்டுவது, தனிப்பட்ட பகைமைக.ைளத் தீர்த்துக் கொள்வது போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
சூழ்நிலைகளையும், தமிழர் பிரதிநிதித்துவத்தின் ஆபத்துகளையும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கத்தக்க மனோநிலை கட்சிகளிடமோ, தலைமைகளிடமோ வரவில்லை.
ஒன்றிணைந்து போட்டியிட அழைப்பு விடுக்கும் கட்சிகள், தலைவர்களில் எத்தனை பேர் தமக்கான இடங்களை, ஒன்றிணையும் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது.
ஆக, ஒற்றுமைப்படுத்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயமாக மாறி விட்டது,
இந்தச் சூழலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் கிழக்கு மாகாண முக்கியஸ்தரான இரா. துரைரத்தினம் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணியுடன் மாற்று அணியில் இருக்கிறது, ஆனால் கிழக்கில் அவ்வாறு இருக்கப் போவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து செயற்படும் என்று இரா.துரைரத்தினம் கூறியிருக்கிறார்.
கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும் அதற்காக இவ்வாறு செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்று, அரசியல் தீர்மானங்கள், நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டையும் காப்பாற்றுவதற்கான ஒரு ஒற்றுமையைத் தான், தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வடக்கில் அந்த ஒற்றுமை துளியளவும் இல்லாத நிலையில், கிழக்கில் இதுபோன்றதொரு நிலைமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் காட்டியுள்ள பச்சைக் கொடி நம்பிக்கை அளிக்கக் கூடியது.
ஆனால் இதே, விட்டுக்கொடுப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறதா என்ற கேள்விகள் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தமுறை வடக்கு, கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதற்குச் சான்றாக உள்ளன.
கூட்டமைப்புக்கு இந்தமுறை வாக்குகள் கணிசமாக குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிட்டால் தான், இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற முடியும் என்ற சூழல் காணப்படுகிறது.
எனவே, கொழும்பு, கம்பஹா, போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்துக் கவனம் செலுத்தி வருகிறது.
கொழும்பில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த போதும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை அதற்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வந்த போதும், கூட்டமைப்பு பல்வேறு காரணங்களால் அதனைத் தட்டிக்கழித்தே வந்தது.
ஆனால், இந்தமுறை அவ்வாறான நிலை இல்லை.
கொழும்பிலிருந்து தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றுக்கான குறைந்தபட்ச வாக்குகள் கிடைக்காவிட்டாலும் கூட, தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான வாக்குகளையாவது பெற முடியும் என்று கூட்டமைப்பு கருதுகிறது.
வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிடுவது குறித்து ஆராயப்படுவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டிருந்த கருத்தினால் ஆடிப் போயிருப்பது, மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி தான்.
கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியானதுமே, யாரும் எங்கும் போட்டியிடலாம், என்று மனோ கணேசன், சமூக ஊடகங்களில், கூறியிருந்ததுடன், நாங்களும் வடக்கில், போட்டியிடுவது குறித்து ஆராய்கிறோம் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அதுபோலவே, இராதாகிருஷ்ணன், வேலுகுமார் போன்றவர்களும், கூட்டமைப்பு ஏனைய இடங்களிலும் போட்டியிடுவதற்கு உரிமை உள்ளது என்றும் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில் இதனால் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட முனையவில்லை. ஆனால் மலையகத்திலும் போட்டியிடலாம், ஆனால் அதன் மதிப்புக் கெட்டு விடும் என்று கூறிய இராதாகிருஷ்ணன், பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தம்முடன் தொலைபேசியில் பேசியதாகவும், மலையகத்தில் கூட்டமைப்பு போட்டியிடாது என்று அவர் உறுதியளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்.
கூட்டமைப்புக்கு தெற்கில் வேலை இல்லை என்றும், கூட்டமைப்பின் அணுகுமுறைகளால் அது வாக்கு வங்கியை இழந்து விட்டதாகவும் அவர் கூறியிருப்பதுடன், அதற்கு சுமந்திரனே காரணம் என்று தனிப்பட்ட தாக்குதலையும் தொடுத்திருக்கிறார்.
கூட்டமைப்பு கொழும்பு, கம்பஹாவில் போட்டியிடுவது பற்றி ஆராய்வதாகவே கூறியிருந்தது. ஆனால் இன்னமும் முடிவெடுக்கவில்லை.
கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட்டால், தமிழர் முற்போக்கு கூட்டணிக்கு பாதிப்பு வரும் சாத்தியங்கள் உள்ளன. அதனால் தான் அந்தக் கட்சியின் தலைவர்களும், எம்.பிக்களும் கொந்தளிக்கிறார்கள்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமது பிரதிநிதித்துவ பலத்தை தக்கவைத்துக் கொள்வதில் மாத்திரமன்றி, கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது.
கொழும்பில் கூட்டமைப்பும் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்க, தமிழர் முற்போக்கு கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளும் குறைந்து போக, இரண்டு தரப்புகளும் ஏமாந்து போய் விடக்கூடாது.
இவ்வாறான நிலையை எல்லா தரப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை, கொழும்பில் தமிழர் முற்போக்கு கூட்டணி ஐ.தே.க.வை விட்டு விட்டு, கூட்டமைப்புடன் இணைந்து தனியாகப் போட்டியிடவும் முன்வரப் போவதில்லை.
கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது பற்றி ஆராய்வதாக கூறியதும், நாங்களும் வடக்கில் போட்டியிடுவது பற்றி ஆராய்கிறோம் என்ற தொனியில் மனோ கணேசன் கூறியிருப்பது, ஏட்டிக்குப் போட்டியே ஆகும்.
தமிழ்க் கட்சிகளின் தலைமைகள், கட்சி ரீதியாக, இனத்துவ, பிராந்திய ரீதியாகவே சிந்திக்க முற்படுகின்றனவே தவிர, தமிழர் பிரதிநிதித்துவம் என்பதையும் ஒட்டுமொத்த தமிழர் நலன் என்பதையும் கண்டுகொள்வதாக இல்லை.
பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒற்றுமையும் பலமும் சிதைக்கப்படுவதைக் காண்பதற்காக சிங்களப் பேரினவாத சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தலைமைகள், கட்சிகள் அவர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகப் போட்டி போட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்தபட்ச ஒற்றுமை பற்றிக் கூட ஆசைப்பட முடியா நிலையில், தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
– கபில்