மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை

அவுஸ்திரேலியாவில் மெல்பேணில் தியாகி திலீபன் கலைமாலை நிகழ்வு  மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் அமைதியான கௌரவமான வாழ்வுக்காக, அறவழியிலான போராட்டத்தின் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 – 09 – 2011 அன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியேற்றல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மெல்பேண் பிறிஸ்ரன் நகர மண்டபத்தில், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய தேசிய கொடியை திரு. அல்பிரட் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியகொடியை திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ஜெயகுமார் ஈகச்சுடரை ஏற்றிவைக்க, கேணல் சங்கர் மற்றும் கேணல் ராயு அவர்களின் திருவுருவப்படங்களுக்கு முறையே திரு. இளைய பத்மநாதன் அவர்களும், திரு. சிசு நாகேந்திரம் அவர்களும் ஈகச்சுடர்களை ஏற்றிவைத்தனர்.

நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கத்தை நிறைவுசெய்துகொள்ள அகவணக்கத்துடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக தியாகி திலீபனின் நினைவுகளை தாங்கிய பாடல்களும் எழுச்சிக்கானங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து செல்வி ருட்சிகா இளங்குமரன் அவர்கள் ”ஈழவிடுதலை காணப்போகின்றோம்” என்ற பாடலுக்கு நடனமாடினார்.

அதனைத்தொடர்ந்து தியாகி திலீபனின் நினைவுகளை தாங்கிய காணொளி அகலத்திரையில் காண்பிக்கப்பட்டது. தியாகி திலீபன் என்ன கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை தியாகம் செய்தாரோ, அதேநிலையே இப்போதும் இருக்கின்றது என்றும், தியாகி திலீபன் கேட்டுக்கொண்டதுபோல அனைத்து மக்களும் எழுச்சிகொண்டு பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பதன் ஊடாக தமிழர்கள் தமது சுதந்திரவேட்கையை வெளிக்கொண்டுவரவேண்டிய காலகட்டம் எழுந்துள்ளதாக அக்காணொளி பதிவுசெய்திருந்தது.

தொடர்ந்து செல்வன் துவாரகன் சந்திரன் அவர்கள், தியாகி திலீபனின் நினைவுகளைச் சுமந்த கவிதையை பதிவுசெய்தார்.

இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமான நிகழ்வில் சிறுமி அபிதாரணி சந்திரன் அவர்கள், தியாகி திலீபனின் நினைவுகளை சுமந்த புதிதாக இயற்றிய பாடலைப் பாடினார். அதைத் தொடர்ந்து ஜேர்மனியிலிருந்து வருகைதந்திருந்த, நாச்சிமார் கோயிலடி இராஜன் தலைமையில் சிட்னி மெல்பேண் கலைஞர்கள் இணைந்து வழங்கிய ”சிறுதுளி” என்ற வில்லிசை நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலையை வெளிநாடுகளிலும் பேணிவரும் திரு. இராஜன் அவர்களின் கலைச்சேவையை அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

தியாகி திலீபனின் நினைவுகளை சுமந்து நடைபெற்ற இந்நிகழ்வு, இரவு எட்டுமணிக்கு தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று அனைவரும் உறுதியெடுத்தபின்னர் எழுச்சியுடன் நிறைவடைந்தது.

2011_thileepan_melb_0212011_thileepan_melb_0312011_thileepan_melb_0412011_thileepan_melb_0512011_thileepan_melb_0612011_thileepan_melb_0712011_thileepan_melb_0812011_thileepan_melb_0912011_thileepan_melb_0112011_thileepan_melb_101