வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஜனாதிபதி அதற்கு தமது அவதானத்தை செலுத்தியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் கடந்த 3ம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிம்மாசன உரையையடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போதே இரா. சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கலந்துரையாடியள்ளார்.
அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் சம்பந்தன் எம்.பி. கலந்துரையாடியுள்ளதுடன் அது சம்பந்தமான விரிவான பேச்சுவார்த்தைக்கான அவசியம் குறித்தும் அவர் பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் உடனடி பதிலை வழங்காத நிலையிலும் மேற்படி விடயம் தொடர்பில் இருவரும் தமது அவதானத்தை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் இரா. சம்பந்தன் எம்.பி. கலந்துரையாடும்போது அவருடன் மாவை சேனாதிராஜா, சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்துள்ளனர்.
சம்பந்தன் எம்.பி. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்திய போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமென்று நெடுங்காலமாக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சிங்கள மக்கள் ஜனாதிபதியான தங்களுக்கு வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். அதேபோன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண்பது தொடர்பில் தங்கள் தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் நாட்டை பிளவுபடுத்த கோரவில்லை. ஒன்றிணைந்த இலங்கையில் அதிகார பகிர்வையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதையும் சம்பந்தன் எம். . இதன்போது ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக அறிய வருகிறது.