நான் அதிகாரங்களை ஏதேச்சதிகாரமாக பயன்படுத்துவதற்காகவோ, அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்காகவோ ஆளுநர் பதவியைப் பெறவில்லை. மாகாண நிர்வாகத்துக்கான எல்லையை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்களை அடியொற்றியதாக இருக்கையில், அதிகார துஷ்பிரயோகங்களோ வரம்பு மீறல்களோ இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என்று வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:-அரச நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவத்தினைக் கொண்ட நீங்கள் சேவையிலிருக்கும்போதே வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அரசாங்க நிர்வாக சேவையில் அதியுச்ச பதவியாக செயலாளர் பதவியே காணப்படுகின்றது. அந்த வகையில் சுகாதார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தேன். அதனையடுத்து சொற்பகாலத்திலேயே வடமாகாண ஆளுநர் பதவியை எனக்கு வழங்குவதென தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு என்னிடத்தில் முன்மொழியப்பட்டது.
அச்சமயத்தில் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி நான் சிந்தித்தபோது அப்பதவியை ஏற்பது மிகவும் கடினமானதொன்றாக அமையும் என்று கருதினேன். ஏனென்றால், எனது பிள்ளைகள் தலைநகரத்தில் தொழில்புரிவதோடு, கற்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். எனது தாயார் முதுமை நிலையில் உள்ளார். ஆகவே அவர்களை பிரிந்து செல்வதென்பது நெருடலாக இருந்தது.
எனினும், ஜனாதிபதி கோத்தாபய வடமாகாணம் தொடர்பாக கொண்டிருக்கும் கரிசனைகள் தொடர்பிலும் செயற்றிட்டங்களை நடைமுறைச்சாத்தியமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில் எனது மக்களின் தேவைகளை அறிந்திருக்கும் நான் அவர்களுக்கு மீண்டும் ஒருதடவை சேவையாற்றுவதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினை இழப்பதற்கும் விரும்பவில்லை.
ஈற்றில் அப்பதவியை பெற்றுக்கொள்வதென்ற முடிவை எடுத்திருந்தேன். அதனடிப்படையில் எனக்கான நியமனத்தினையும் ஜனாதிபதி முன்னிலையில் பெற்றுக்கொண்டு கடமைகளை பெறுப்பேற்றுள்ளேன்.
என்னைப்பொறுத்தவரையில், வவுனியா மாவட்டத்தில் நெருக்கடியான சூழலில் கடமைகளை ஆற்றியிருந்தேன். குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அசாதாரண சூழலில் வவுனியா நோக்கி இடம்பெயர்ந்து வந்தபோது அவர்களுக்கு அடைக்கலமளித்து பாதுகாக்க வேண்டிய பாரிய பணியொன்று எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அந்தப்பணியை பொறுப்பெடுத்த நான் அந்த மக்களின் நெருக்களை போக்குவதற்கு முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தேன். அதன்பின்னர் எனக்கு மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இடமாற்றம் வந்த போது வவுனியாவிலிருந்து செல்ல வேண்டாம் என்று எத்தனையோ பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்கள்.
அந்தக் குரல்களும் அவர்கள் என்மீது கொண்டிருந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்களும் இன்றும் எனது காதில் ஒலித்துக்கொண்டும் கண்முன்னே தோன்றியும் மறைகின்றன.
கேள்வி:- ஆளுநர் பதவிக்காக உங்களுடைய பெயர் முன்மொழியப்பட்டபோதும் பதவியேற்பு வரையில் தளம்பல் நிலை தொடர்ந்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- நான் 35வருடங்களாக நிர்வாக சேவையில் இருந்து வருகின்றேன்.அதிலிருந்து திடீரென ஓய்வு பெறுவது என்பது இயலாத விடயமாக இருந்தது. அண்மையில் அமைச்சின் செயலாளர் பதவி கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் தொடர்வதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டிருந்தேன். ஆளுநர் பதவியைப் ஏற்கும் விடயத்தில் அரச அதிகாரியாக நிதானமாக சிந்திக்க
வேண்டிய தேவை இருந்தது. அரச சேவையில் இருந்த நான் எனது சேவைக்காலத்தினை நிறைவுறச் செய்யாது வெளியேறுவதும் கடினமான விடயமாக இருந்தது.
அந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பலனாக சில முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கான நன்மைகளைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் சேவைக்காக எனக்கு ஆளுநர் பதவியை தற்போது வழங்கியுள்ளார். அதற்கான நடைமுறைகளை நிறைவேற்றுவதில் தான் இழுபறியான நிலைமைகள் இருந்தன.
கேள்வி:- வடமாகாணத்துக்கு இதுவரை நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பொறுத்தவரையில் இராணுவ, அரசியல் பின்னணியைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். அவ்விதமான வகையறைக்குள் இல்லாத நீங்கள் எவ்விதமான தனித்துவத்தினை பேணுவதற்கு திட்டமிட்டிருக்கின்றீர்கள்?
பதில்:- என்னைப்பொறுத்தவரையில் கடந்தகாலத்தில் இருந்த ஆளுநர்களுடன் ஒப்பிட்டு கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. அத்துடன் அவர்களின் செயற்பாடுகள் குறித்து அலசிப்பார்க்கவும் நான் விரும்ப வில்லை. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடக்கவிருப்பதை செவ்வனே செய்வது பற்றியே சிந்திக்க வேண்டும்.
நான் பதவியேற்ற நாள் முதல் எனது பதவி நிலைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக முன்னெடுத்துச் செல்வதையே விரும்புகின்றேன். நிச்சயமாக எனது செயற்பாடுகளில் தனித்துவமான தன்மை இருக்கும். அது வடக்கு மாகாணத்தினை பொருளாதார ரீதியில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்வதும், மக்களின் வாழ்வியலை உயர்த்துவதுமே இலக்காக இருக்கும்.
கேள்வி:- வடமாகாண மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாத சூழல் நீடிக்கின்ற நிலையில் அதுகுறித்து விசேட கவனத்தினைக் கொண்டிருக்கின்றீர்களா?
பதில்:- தமது சொந்த நிலங்களுக்கு திரும்புவதற்காக காத்திருக்கும் மக்களின் வேட்கையையும், உரிமையையும் நிறைவேற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் எனது கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆகவே மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்புவது மட்டுமல்ல அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் எனது கரிசனை இருக்கின்றது.
அதற்குரிய செயற்றிட்டங்களும் ஜனாதிபதியிடத்தில் இருக்கின்றன. அவை குறித்து சில விடயங்களை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டும் உள்ளார். ஆகவே அச்செயற்றிட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றபோது எதிர்பார்த்த மாற்றம் நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
மேலும் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எவையும் இல்லை. நான் அரசியல் பின்னணியைக் கொண்ட ஒருவரும் அல்ல. அத்துடன் இப்பதவியை முன்னிலைப்படுத்தி எதிர்காலத்தில் நகரவேண்டிய வேறு இலக்குகளும் இல்லை. கடந்த காலங்களில் எவ்வாறு எனது செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்திருந்தேனோ அவ்விதமாகவே தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருக்கின்றேன்.
மேலும் வவுனியா மாவட்ட செயலாளராக நான் கடமையாற்றியபோது நாடளாவிய ரீதியில் மிக வறுமையான மாவட்டங்களில் ஒன்றாக அம்மாவட்டம் இருந்தது. அம்மாவட்டத்தின் வறுமை வீதமும் 24சதவீதமாக இருந்தது. 2012இல் நான் அங்கிருந்து இடமாற்றம் பெற்ற சமயத்தில் அம்மாவட்டத்தின் வறுமை மட்டமானது வெகுவாகக் குறைந்ததோடு கொழும்பு, கம்பஹா போன்றவற்றுக்கு அண்மித்த வகையில் முன்னேற்றம் கண்டிருந்தது.
அதேபோன்று தான் வறுமையான மாவட்டங்களின் பட்டியலில் முதலில் இருந்த மட்டக்களப்பும் எனது பணிக்
காலத்தில் கணிசமான முன்னேற்றத்தினை எட்டியிருந்தது. ஆகவே அடிப்படை மனித அபிவிருத்திக்கான சுட்டிகளை அடையாளம் கண்டு குறிகாட்டிகளை நோக்கி மேம்படுத்துகின்றபோது நிச்சயமான மாற்றத்தினை அடைய முடியும். அதனை அனுபவரீதியாகவும் கண்டிருக்கின்றேன்.
கேள்வி:-வடக்கில் குடும்பங்களுக்கு தலைமைதாங்குதல் உள்ளிட்ட சமூகத்தில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள பெண்களுக்கு அம்மாகாணத்தின் முதற் பெண் ஆளுநர் என்ற வரலாற்றுப் பதிவைக் கொண்டுள்ள நீங்கள் எவ்விதமான செய்தியை கூற தலைப்பட்டிருக்கின்றீர்கள்?
பதில்:- முதலாவதாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் சுயநம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அதனை மென்மேலும் அதிகமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான நம்பிக்கையின் காரணமாகவே அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த முடியும்.
தமிழ் பெண்களைப் பொறுத்தவரையில் கலாசார, பண்பாட்டு ரீதியாக தங்கி வாழும் மனப்பான்மையில் இருக்கின்றார்கள். இந்த மனப்பான்மையே அவர்களை அனுதாபத்துக்குரியவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. ஆகவே தம்மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றபோது அவர்கள் ஒவ்வொருவரும் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
கேள்வி:- போரின் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ள வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிலைகளில் விசேட தேவையுடைய தரப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் பற்றிய விசேட கருத்திட்டமொன்றை முன்மொழியும் திட்டமுள்ளதா?
பதில்:- பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என்று பல்வேறு தரப்பினர் விசேட தேவைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். மட்டக்களப்பில் நான் மாவட்ட செயலாளராக கடமையாற்றியபோது தான் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக நாச்சியார் உணவகம் என்ற திட்டமொன்றை அறிமுகப்படுத்தி அங்குரார்ப்பணம் செய்திருந்தேன். அந்தக் கருத்திட்டம் தற்போது வடக்கு உட்பட நாடளாவிய ரீதியில் படிப்படியாக வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஈடேற்றுவது குறித்து நான் சிந்தித்தபோது பெண்களுக்கென்றே தனித்துவமாக உள்ள சமயல்கலையை மையப்படுத்தி இந்தக் கருத்திட்டத்தினை முன்மொழிந்தேன். இதற்காக விசேட பயிற்சிகளோ, செலவீனங்களோ இன்றி அவர்களுக்குள்ள இயற்கையான திறனை மையப்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்து இத்திட்டத்தினை முன்மொழிந்தேன். அது வெற்றிப் பாதையில் செல்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
கேள்வி:- வடக்கில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருந்தும் வன்முறைக்குழுக்களின் நடமாட்டமும் செயற்பாடுகளும் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிப்பதற்கு காரணமாகின்ற நிலையில் அது குறித்து உங்களது பார்வை எவ்வாறிருக்கப் போகின்றது?
பதில்:- சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் நாம் அரசியல் மயப்படுத்தக்கூடாது. சமூகச் சட்டங்களை மீறுகின்றவர்கள் சமூக குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆகவே சமுகத்தில் அமைதியையும் சமாதானத்தினையும் நிலைபெறச் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவே உள்ளேன்.
கேள்வி:- நீங்கள் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டங்களின்போது அரசியல் பிரதிநிதிகளாக இருக்கும் இணைத்தலைவர்களும், ஆளுநரும் முரண்படுவார்கள். அதேபோன்று மாகாண சபை ஆட்சியில் ஆளுநர் தலையீடுகளைச் செய்வதாகவும் கட்சி அரசியலை திரைமறைவில் வைத்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் எவ்விதமான சார்பு நிலையற்றவர் என்று உங்களை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் ஆளுநரின் அதிகாரத்தை மீறிய தலையீடுகள் இருக்காது என்று நம்பிக்கை கொள்ள முடியுமா?
பதில்:- ஆம், ஏனென்றால் மாகாண நிர்வாகத்தின் எல்லைகளை நான் தெளிவாக தெரிந்து வைத்துள்ளேன். நான் அதிகாரங்களை ஏதேச்சதிகாரமாக பயன்படுத்துவதற்காகவோ அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்காகவோ ஆளுநர் பதவியைப் பெறவில்லை. எனது பணிகள் அனைத்தும் மக்களை அடியொற்றியதாக இருக்கையில் அதிகார துஷ்பிரயோகங்களோ வரம்பு மீறல்களோ இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை.
வடக்கில் வேறுபட்ட அரசியல் கட்சிகள், குழுக்கள், கொள்கைரீதியான வேறுபாட்டைக் கொண்ட தரப்பினர்கள் என்று பல்வேறு தரப்பினர் இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் பணியாற்றியபோது அத்தகைய வெவ்வேறுபட்ட தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.
மேலும் தனிமனிதர்களுக்கு காணப்படுகின்ற சுயவிருப்புவெறுப்பின் அடிப்படையில் ஏற்படுகின்ற விட்டுக்கொடுப்பற்ற போக்குகளுக்கு அரசியல் வடிவம் அல்லது நிருவாக வடிவம் கொடுப்பதன் காரணத்தால் தான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அரசியல் பிரதிநிதிகளும் சரி அரச அதிகாரிகளும் சரி மக்களின் நலன்களையும் திட்டங்களையும் பேணிக்காப்பதையும் நிறைவேற்றுவதையும் பொறுப்பாக கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தில் சரியான புரிதல் ஏற்படுகின்றபோது முரண்பாடுகள் அனைத்தும் பனிபோல் அகன்றுவிடும்.
கேள்வி:- 13ஆம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?
பதில்:- 13ஆம் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஜனாதிபதி கோத்தாபய தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அதுசார்ந்த இதர விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவரிடத்திலேயே உள்ளது. அவருடைய தீர்மானத்தின் அடிப்படையில் தான் அந்த விடயங்கள் இடம்பெறவுள்ளன.
கேள்வி:- இறுதியாக வடக்கு மாகாண அரசியல், சிவில் தரப்பினரிடத்தில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது?
பதில்:- போரின் பாதிப்புக்களிலிருந்து மீண்டெழுவதையே நாம் அனைவரும் கனவாக கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரும் பேதமின்றி ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் மனதில் இருக்கும் இறுக்கங்களையும், குறைகளையும் களைந்து இதய சுத்தியுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
ஆசிரியை தொடக்கம் ஆளுநர் வரை
யாழ்ப்பாணம் இளவாலை பத்தாவத் தையை சொந்த இடமாகக் கொண்ட பிரின்ஸ் சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தபின்னர் 1985 இல் ஆசிரிய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் ரஜரட்ட மற்றும் பேராதனை பல்கலையில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வணிக நிருவாகம் ஆகியவற்றில் முதுமாணி கற்கையையும் நிறைவு செய்தார். பின்னர் 1991ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவைக்கு தமிழ் சமூகத்தினை சேர்ந்த ஒரேயொருவராக உள்ளீர்க்கப்பட்டு முதலாவதாக அநுராதபுர மாவட்ட செயலகத்தில் நியமனத்தினைப் பெற்றார்.
அதனைய டுத்து வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபராக பதவியேற்றுக்கொண்ட இவர் 2008இல் வவுனியா மாவட்ட செயலாளராகவும், 2012இல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றினார். 2017 செப்டெம்பரில் இலங்கை சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவர் 2019 நவம்பரில் சுகாதாரம், போஷாக்கு சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு 30 டிசம்பர் 2019இல் வடமாகாண ஆளுநராக நியமனம் பெற்றார்.
நேர்காணல்:- ஆர்.ராம்