அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்றினை அவர் அறிந்திருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
அரச தலைவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள கொள்கை அறிக்கையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினையினை முக்கியமாகக் கருதி ஒரு கொள்கை அறிக்கையினை வெளியிடுவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடைபெற்றது.
அவர் புதிய சித்தாந்தங்களைச் சொல்கின்றார். இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வரலாற்றினை மாற்றியமைத்து, இந்த நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இல்லை என்கின்றார். இந்த நாட்டில் அரசியல் அதிகாரஙகளை பகிரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கின்றார்.
சர்வதேச ரீதியாகஇந்தியவுடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள், ஐ.நா சபையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முப்பது ஒன்று என்ற தீர்மானம், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் வகித்த வகிபாகம், முழுச் சர்வதேசமுமே தலையீடு செய்து இந்த நாட்டின் இனப் பிரச்சினை, இனத்தின் விடுதலை கைதிகளுடைய விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீ்க்கப்படவேண்டும், காணாமல் போனோருக்கான தீர்வு, தமிழர்களுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற 34தீர்மானங்கள் முழுமையாகவே 30.01.2015ஆம் ஆண்டு 47நாடுகள் ஆதரவுடன், தமிழ்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வகிபாகத்துடன், உலகிலே ஏகமனதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதை நிராகரிப்போம் என்று சொல்லுகின்றார்.
அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் ஒரு புதிய வார்த்தையினைப் பாவித்திருக்கின்றார்.
பௌத்த சிங்கள நாடு என்பது மாத்திரமல்ல, பௌத்த சிங்கள பெரும்பான்மைத்துவ ஆதிக்கத்தினை நான் கடைப்பிடிப்பேன், நிலைநாட்டுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.
இந்த நாட்டில் வேறு இன மக்கள்இருக்கின்றார்கள் என்றோ, அவரகளும் சமமான உரிமைகள் உடையவர்கள் என்றோ, அந்த மக்கள் சமமாக நடத்தப்படவேண்டுமென்றோ ஒரு வார்த்தையினையும் குறிப்பிடாது, பௌத்த சிங்கள ஆட்சி என்பதற்கு அப்பால், இன்னுமொரு புதிய வார்த்தையினைத் தற்பொழுது கூறியிருக்கின்றார்.
பெரும்பாண்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது மொழி உரிமைக்காகவும், தமது நிலவிடுவிப்பிற்காகவும், தமது விடுதலைக்காகவும் பல இலடசம்பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், அதைப்பற்றி ஒரு வார்த்தை குறிப்பிடப்படவில்லை.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு சம அந்தது உண்டு, இந்த மண்ணினை ஆட்சிசெய்வதற்கு உரிமையுள்ளவர்கள். சித்தாந்தத்தினையோ, ஜனநாயக பண்பாடுகளையோ குறிப்பிடாது, பௌத்த சிங்களப் பேரினவாத, பெரும்பாண்மைத்துவ ஆட்சிதான் இந்த நாட்டில் இடம்பெறும் என உறுதி பூணடிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப்பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் எங்களுடைய மக்களும் இணைந்து ஒரு புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு உதவியிருக்கின்றனர். அதன் மூலம் இந்த நாட்டில் புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டுமென இலங்கை பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் எடுத்தது.
இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்துக்கட்சிகளையும் இணைத்து, அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டு, புதிய அரசியலமைப்பிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கான இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதை மகிந்த தரப்பினரான பௌத்த தீவிரவாதிகள் எதிர்த்தனர், இந்த அரசியலமைப்பில், சமஸ்டி ஏற்பாடுகள் இருப்பதாகவும், நாடு பிளவுபட்டுவிடும் எனவும் கூக்குரலிட்டனர்.
அதேவேளை முன்னாள் வடக்கின் முதல்வரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனும் அந்த அரசியலமைப்பை எரிக்குமாறும் கூறினர்.
பாராளுமன்றில் 03.01.2020 அன்று கோத்தபாய மற்றும் மகிந்தவை நாம் சந்தித்தோம், எங்களுடைய தலைவர் சம்பந்தன் அவர்களிடம் ஒரு விடயத்தினைக் கூறினார், தென்னிலங்கையில் சிங்கள மக்கள் உங்களுக்கு அதிகமாக வாக்களித்திருக்கின்றனர்.
ஆனால்எங்களுடைய தமிழ் மக்கள் 98வீதமானோர் எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவேணடும்என்பதற்காக வாக்களித்திருக்கின்றனர். நீங்கள் அதை உங்கள் கொள்கை அறிக்கையில் குறிப்பிடவில்லை என கூறியிருந்தார்.
எனவே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக புதிய அரசும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடாத்த புதியஅரசியலமைப்பை உருவாக்கவேண்டும்எனவும் கூறியிருக்கின்றோம் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவில்லை.
கோத்தாபய ராஜபக்ஷ அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்டவுடன் இந்தியாவின் செய்தி, இந்த பிராந்தியத்தின் ஆதிக்கம் சீனாவின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பது மட்டுமல்ல, நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அதை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழ்மொழியில் தேசியகீதம் பாடக்கூடாது என்பதற்காக நாம் சண்டையிடுவதல்ல, அப்படி தேசியகீதம் இசைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என நாம் நினைக்கவில்லை. அதுவல்ல பிரச்சினை, மொழி ஒரு அடையாளம், தமிழுக்கு சம அந்தஸ்த்து இல்லை என்பது தமிழர்களுக்கு சம அந்தஸ்து மறுக்கப்படுவதாகும்.
இந்த ஆட்சியினால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் ஜனநாயகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் நிறையவே இருக்கின்றன.
எமது இனத்தை அழிக்கின்ற, நிலங்களை ஆக்கிரமிக்கின்ற, எமது மொழி உரிமைகளை முடக்குகின்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் முனைப்புப் பெற்று வருகின்றன.
ராணுவ அதிகாரிகள்எல்லாம் தற்போது சிவில் நிர்வாகத்தில் இந்த அரசாங்கத்தால் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் சுவாசத்தினை நிறுத்திவிடக்கூடியவகையில் அரச தலைவரின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகின்றது.
எனவே நாம் எமது இனமும், நிலமும் விடுதலை பெறும்வரையில் ஜனநாயக ரீதியாக தொடர்ந்தும் போராடுவோம். என்றார்.