2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்கழி 31ஆம் திகதி ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க தூதராலயம் ஈராக்கிய மக்களின் பலத்த தாக்குதலுக்குள்ளானது. 2003இல் அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்து 16 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அமெரிக்காவின் ஈராக்கிய கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்பதை தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. ஈராக்கிய அரசாங்கம் இரண்டு நாடுகளில் தங்கியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் அமெரிக்கா பரம வைரியாக கருதும் ஈரான் ஈராக்கினுள் செல்வாக்குடன் திகழுகிறது. ஒருபுறம் ஈராக்கை பணிய வைப்பதற்கு அமெரிக்காவின் பொருளாதார தடை மறுபுறம் ஈராக்கினுள் ஈரானின் செல்வாக்கை மழுங்கடிக்கச் செய்வதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
ஈராக்கினுள் அமெரிக்க பாரிய கட்டுமாண பணிகளை நிறைவேற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஈரானிய ஆதரவு சியா படைப்பிரிவினரால் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா ஈராக்கினுள் குண்டு வீசி தாக்குதலை நடத்தி இருபதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மூர்க்கத்தனமான குண்டு வீச்சுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே ஈராக்கில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. ஈராக்கினுள் அமெரிக்கா கடைப்பிடித்த கொள்கை தோல்வியை கண்டுள்ளது. இன்றைய நிலையில் மிகவும் ஆபத்தான யுத்தங்களை உருவாக்கக் கூடிய சூழல் ஈரான் அமெரிக்க முரண்பாட்டினாலும் வடகொரியா அமெரிக்கா முரண்பாட்டினாலும் காணப்படுவதாக துணிந்து கூறலாம். ஈரானுக்கெதிரான பொருளாதார தடை அமெரிக்காவின் ஒருதலைபட்சமான நடவடிக்கை என்பதும் சில ஐரோப்பிய நாடுகள் கூட ஈரான் தனிமைப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்பதும் சமகால நிகழ்வுகளை அலசுபவர்களுக்கு புரியும். வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்முக்கு கிறிஸ்மஸ் பரிசு ஒன்று தருவதாக அச்சுறுத்தியுள்ளார். புதிய ஒரு ஏவுகணை ஒன்றை பரீட்சிக்க இருப்பதாக வடகொரிய அதிபர் தெரிவித்தமையே கிறிஸ்மஸ் பரிசாகும். அமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும் சிங்கப்பூரில் வடகொரியா தென்கொரிய எல்லையின் வியட்னாமில் சந்தித்து மூன்று தடவைகள் பேச்சுவர்த்தை நடத்தி இருந்தனர். இதனால் கொரிய பிராந்தியத்தில் யுத்தம் மூழுவது தவிர்க்கப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா வடகொரியாவுக்கெதிரான பொருளாதார தடைகளை இன்னும் தளர்த்தாத நிலையில் வடகொரிய அதிபர் அச்சுறுத்தல்களை விடுத்த வண்ணம் உள்ளார். வடகொரிய அதிபரின் அச்சுறுத்தல் பற்றி ஜனாதிபதி ட்ரம்மிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அதிபர் ட்ரம் தமக்கே உரிய பாணியில் பதிலளித்தார். வடகொரிய அதிபர் மிகவும் நேர்மையானவர் நெருங்கிய நண்பர் எமக்கு கொடுத்த வாக்குகளை அவர் மீற மாட்டார் என நம்புகிறேன் என கூறினார். கிளப்பப்படுகின்றது.
சோபா எனப்படும் ஒப்பந்தம் இலங்கை, அமெரிக்க நாடுகளுக்குமிடையில் கைசாத்திடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை தமிழில் விரிவாக கூறினால் படையினரின் அந்தஸ்து பற்றிய ஒப்பந்தம் எனக் கூறலாம். இந்த ஒப்பந்தத்திற்கு தற்போதய அரசாங்கம் ஆதரவினைக் காட்டவில்லை. அமெரிக்க பணியாளர்கள்
இலங்கையில் தங்கியிருக்கும். காலப்பகுதிக்குள் எந்தவிதமான வரிகளையும் செலுத்த தேவையில்லை. சுங்க தீர்வை வரிகள் அல்லது வேறுவகையான நாட்டைப் பாதுகாக்கும் வரி பெறுமதி சேர்க்கும் வரி என கூறப்படும் துறைமுக விமான நிலைய வரி போன்றவற்றையும் செலுத்த தேவையில்லை அமெரிக்க பணியாளர்களின் பொதிகள், வாகனங்கள் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படமாட்டாது. கப்பல்கள், வாகனங்கள் இலங்கைக்குள் வரலாம், போகலாம். அமெரிக்க கப்பல்கள், விமானங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது இறங்கு கட்டணங்கள் அல்லது வேறு வரிகள் செலுத்த தேவையில்லை. கப்பல்களும் விமானங்களும் இலங்கை தரப்பினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது.
இந்த இராணுவ, சிவிலியன் பணியாளர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் கீழ் பணியாற்றுகிறார்கள். அவர்களுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு சில தனியார் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சேவைகளைப் பெறும் சூழ்நிலைகளில் ஒப்பந்தம் அவர்களையும் உள்ளடக்குகிறது. இந்த மூன்று தரப்பினரும் இராணுவ பணியாளர்கள் சிவிலியன் பணியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் இலங்கையில் வருகை தருவதற்கு தங்கியிருப்பதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது. கடல்மார்க்கம், விமானமார்க்கமாக வருகை தருதல் பயிற்சிகள், ஒத்திகைகள், மனிதாபிமான செயற்பாடுகள், இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட வேறு விடயங்களும் ஒப்பந்தத்தில் இடம் பெறலாம். தற்போதய தகவல்களின் பிரகாரம் அமெரிக்க பணியாளர்களுக்கு இராஜதந்திரிகட்கு உரித்தான விடுபாட்டு உரிமைகள், சிறப்புரிமைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அமெரிக்க பணியாளர்கள் அமெரிக்க அடையாள இலச்சினையுடன் இலங்கைக்குள் வரலாம். வெளியேறலாம். அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்கள் அதாவது சாரதி உரிமைப்பத்திரம் போன்றவை இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும். இன்றைய சர்வதேசசூழலில் இலங்கை அவதானத்துடன் செயற்படுவதாக தெரிகிறது.
அமெரிக்கா எனும் ஏக வல்லரசின் அதிபர் டொனால்ட் ட்ரம் தற்போது பொருளாதார தடைகளை ஈரானுக்கெதிராக மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அயோத்துல்லா கமனியை இலக்குவைப்பதாக தெரிவித்துள்ளார். இம் மிரட்டல்களுக்கு ஈரான் அரசாங்கத்தின் எதிர்வினைகள் எவ்வாறு காணப்படுகிறது என்பதை அறியாமல் இவ்விடயத்தின் பரிமாணங்களை அறிய முடியாது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் தடை செய்யும் நடவடிக்கையை அமெரிக்காவின் பொருளாதார யுத்தம் என ஈரான் பேச்சாளர் கூறுகிறார். அமெரிக்க அதிபரின் அறிவிப்புகள் முட்டாள்தனமானவை என்னும் கடந்த 40 வருடங்களாக அமெரிக்கா ஈரான் மேல் எந்த தடையை விதிக்கவில்லை, இனிமேல் புதிதாக பிறப்பிப்பதற்கு எந்த தடை உள்ளது. எனவும் இத்தடைகளால் அமெரிக்கா அடைந்த பெருமைகள் எவை எனவும் அயோத்துல்லா காமெனி மீது புதிதாக தடை விதிப்பதன் மூலம் அவருக்கு எந்த விதமான சங்கடங்களும் ஏற்படப் போவதில்லை எனவும் அயோத்துல்லா கமனி அமெரிக்காவிற்கு பயணம் செய்வதுமில்லை எனவும் நடைமுறையில் இத்தடைக்கு ஈரான் அடங்கப்போவதில்லை எனவும் பேச்சாளர் கூறியுள்ளனர். அமெரிக்க அதிபர் புதிய பொருளாதார தடைகளை அறிவித்ததால் ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை அடித்து மூடியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டின் அரசியல், பொருளாதார விவகாரங்களை அலசும் போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரபலமான ஜனாதிபதிக்கெதிரான குற்றவியல் பிரேரணை பிரதான பேசுபொருள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அமெரிக்க பாராளுமன்றம் இருசபைகளைக் கொண்டதென்பதும் சட்டசபையான பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் கை ஒங்கியிருப்பதும் இரண்டாவது சபையான செனட்சபையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ரம்மின் குடியரசுக்கட்சியின் கை ஒங்கியுள்ளதென்பதும் பழைய செய்திகளாகும். ஜனநாயக கட்சியினரால் ஜனாதிபதி ட்ரம் சொந்த நலன்களுக்காக உக்ரைன் அரச தலைவரிடம் ஜனநாயக கட்சி அபேட்சகரான பிடனுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்குமாறு நெருக்குதல்களைக் கொடுத்தார் என்பதே பிரதானகுற்றச்சாட்டாகும். மேலதிகமாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வெள்ளைமாளிகை அதிகாரிகளைத் தடுத்தார் என்பதும் குற்றச்சாட்டாகும். பிரதிநிதிகள் சபையில் 2019 மார்கழி நடுப்பகுதியில் அவதூறுப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது, 2020 முற்பகுதியில் செனட் சபையில் விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அமெரிக்க அதிபரின் குடியரசுக்கட்சி கூடிய ஆசனங்களை செனட் சபையில் பெற்றுள்ளதால் அவதூறுப்பிரேரணை செனட்சபையில் நிறைவேற்றமுடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவே அதிபர் ட்ரம் அவதூறுப்பிரேரணை தொடர்பாக மெத்தனப்போக்கை கடைப்பிடித்திருக்கிறார். எனினும் 2020 நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்முக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் பிரசாரங்களில் உக்ரைன் விவகாரம் நிச்சயமாக எதிரொலிக்கும். தற்போது காணப்படும் அரசியல் பொருளாதார சூழலை அதிபர் ட்ரம் செல்வாக்குடன் திகழ்வதால் இரண்டாவது தடவையாகவும் ட்ரம் ஐனாதிபதியாக வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சட்டவாட்சி வலுவேறாக்கம் நல்லாட்சிக்கு பேர்போன அமெரிக்காவின் ஜனநாயகம் அமெரிக்க அதிபருக்கெதிரான அவதூறுப்பிரேரணைமூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது நிதர்சனமானது.
2019 இன் பிறிதொரு அரசியல் நிகழ்வினைஎடுத்துக் கொண்டால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரெக்சிற் விவகாரம் நடைமுறைக்கு வருமென்பது 2019 மார்கழி பொதுததேர்தலில் பிரதமர் ஜோன்சனின் பழமைபேண்கட்சி பெற்ற வெற்றியால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2016இல் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பிரித்தானிய ஐக்கிய இராச்சிய மக்கள் விலகுவதற்கு ஆணை வழங்கினார். எனினும் பழமைபேண்கட்சி பிரதமர்களால் பிரெக்சிற் தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றில் அங்கீகாரம் பெறமுடியவில்லை. பிரதமர் தெரேசாமே மூன்று தடவைகள் தமது யோசனைகளை பாராளுமன்றில் முன்வைத்தார். அங்கீகாரம் பெறமுடியவில்லை க ைடசித்தலைவர் பதவியை இராஜினாமாசெய்தார். பிரதமர் பதவியையும் இராஜினாமாசெய்தார். பழமைபேண் கட்சித்தலைவராகவும் பிரதமராகவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவுசெய்யப்பட்டார். அவரது யோசனையும் பாராளுமன்றில் ஏற்கப்படவில்லை. பாராளுமன்றத்தைகலைத்து மார்கழி 2019இல் பொதுததேர்தல் நடத்த ஏற்பாடு செய்தார். பழமைபேண்கட்சி 365 ஆசனங்களைப்பெற்றதால் பிரெக்சின் விலகல் ஜோன்சனின் யோசனைகளின்படி நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது. மார்கழி 2019 இல் விலகலுக்கானமசோதாவை பாராளுமன்றில் சமர்பித்து அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலையில் தை 31ஆம் திகதி 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் விலகுவது உறுதியாகிவிட்டது.
வல்லரசு நிலையை நோக்கி நடைபோடும் மக்கள் சீனாவுக்கு சவால் விடும் வகையில் கொங்கொங் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. சீனாவின் ஒருநாடு இரண்டுமுறைமைகள் என்கின்ற நிர்வாக சித்தார்ந்தத்துக்குநிச்சயமாக சவால் ஏற்பட்டுள்ளது. 74 இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட 426 சதுரப்பரப்பளவைக்கொண்ட கொங்கொங் பிரதேசம் கைத்தொழில் விருத்தியில் மேன்மை அடைந்துள்ளதுடன் பிரஜைகளின் தலாவருமானம் மிக உயர்வாக உள்ளது. பிரித்தானிய கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்பட்டகொங்கொங் பிரதேசம் 1997ஆம் ஆண்டு மக்கள் சீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்க–பிரித்தானியஅரசாங்கங்கள் காத்திருக்கின்றன என்பது இரகசியமானதல்ல. கொங்கொங் கிளர்ச்சிகளில் குறிப்பாக பிரிட்டனின் காங்கிரஸ் மூலமாக காணப்பட்டன என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் சீனாவின் பெருமைக்கும் கீர்த்திக்கும் கொங்கொங் விவகாரம் ஒரு கரும்புள்ளி என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் சீனா வன்முறையை பிரயோகிக்கவில்லை என்பது ஆறுதலானவிடயமாகும்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்ற சூடு ஆறமுன் இந்திய தலைவரின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றார். கார்த்திகை 29ஆம் திகதி இந்தியாசென்ற ஜனாதிபதி கோத்தபாயவை சந்தித்த பிரதமர் மோடி, இலங்கை இந்திய உறவுகளை மேலுமொரு புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என துணிந்து கூறலாம். இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைவதாக இந்திய சந்தேகங்கள் அதிகரித்துள்ளதாக சில ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ள சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இடம்பெற்றுள்ளது. கோத்தபாய –மோடி உச்சிமாநாடு மிக நட்பான சூழலில் நடைபெற்றது. இலங்கை–இந்திய விரைவில் நெருடலான விடயங்கள் மிக நுணுக்கமாக விவாதிக்கப்பட்டன. கோத்தபாயவின் இந்தியவிஜயம் இருதரப்புக்கும் என ஊடகங்கள் புகழாரம் சூட்டின. அமெரிக்க அதிபர் உள்நாட்டில் அவதூறுப் பிரேரணைக்கு முகம்
கொடுத்த சூழ்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் பக்தாதியை அமெரிக்கப் படைகள் துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் மூலம் கொன்றனர். முன்னைய ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற முடியாத காரியத்தை ஜனாதிபதி ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பைஏற்படுத்தியது. செப்டெம்பர் 11 அல்கெய்தா அமெரிக்க வர்த்தக கோபுரத்தின்மீது பாரிய தாக்குதலை நடத்தியபின் அமெரிக்காவின் எதிர்ப்பயங்கரவாத நடவடிக்கைகள் புதியதொரு தருணத்தில் ஆரம்பிக்கப்பட்டன. பாக்தாதியின் கொலை அமெரிக்க எதிர்ப்பயங்கரவாததொடர் நடவடிக்கைகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.
சிரிய உள்நாட்டுப்போர் 2011 இலிருந்து இந்நூற்றாண்டின் மோசமானஅகதி பிரச்சினையை உருவாக்கியது. அமெரிக்கா, ரஸ்யா, சவூதிஅரேபியா, துருக்கி, ஈரான் ஆகியநாடுகள் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ள சிரிய அரசதரப்பினர்க்கும் சிரிய அரசு எதிர்த்தரப்பினருக்கு உதவிபுரிந்து வருகிறார்கள் அமெரிக்க சவூதி அரேபிய அரச எதிர்ப்பாளர்கட்கும் ரஸ்யா–ஈரான் சிரிய அரசாங்கத்தினரும் ஆதரவு வழங்குகிறார்கள். 2015இல் ஈராக் சிரியநாடுகளில் செல்வாக்குடன் பலமாக விளங்கிய ஐ.எஸ். அமைப்பு பல பிரதான நகரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பெறுமதிவாய்ந்த எண்ணெய் வயல்களின் மூலம் பெருவாரியான அந்நிய செலாவணியைசுருட்டியது. எனினும் அமெரிக்க, ரசிய, ஈரான் ஆதரவுப் படைகள் மூலம் ஐஎஸ் தோற்கடிக்கப்பட்டது. 2017ஃ2018 இல் ஐ.எஸ். பல நகரங்களிலிருந்து பின் வாங்கியது. இச்சூழலில் ஐ.எஸ். அமைப்பின் ஆற்றல் கேள்விக்குரியதாகியது. ஐ.எஸ். பலமிழக்கவில்லை. உலகின் எப்பகுதியிலும் தாக்குதல் நிகழ்த்துவோம் என காட்ட 2019 சித்திரையில் இலங்கையில் தாக்குதல் நடத்தி இலங்கையின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் நீண்டகால பிராந்திய நட்பு அணியான குர்திஸ் அமைப்பை கைவிட்டு அமெரிக்க படைகளை சிரியாவிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தமை அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என பலரும் கேள்வி கேட்கும் நிலைக்கு உள்ளாகியது.
புரட்டாதி 14ஆம் திகதி சவூதிஅரேபிய அரசுக்கு சொந்தமான அப்கைத்துராய்ஸ் பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு பாரிய எண்ணெய் வயல்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ். அமைப்பே உரிமைகோரியது. எனஅழைக்கப்படும் பிரபலமான எண்ணெய் வயல்களே தாக்குதலுக்கு உள்ளாகின. உலகின் பிரதான நாடாகிய சவூதியின் எண்ணெய் உற்பத்திசந்தைப்படுத்தலில் பாதகமான தாக்கம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் வர்த்தக தடையால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு இத்தாக்குதல் ஆறுதல் தந்தது. காரணம் என்னவெனில் ஈரானின் எண்ணெய் விற்பனையில் தடைகள் இருந்தாலும் பன்முகமான வழிகளில் அதிகரித்தது. சவூதியின் பிரபலமான ஊடகவியலாளர் கசோக்கி இஸ்தான்புல்லிலுள்ள சவூதி துணைத்தூதராலயத்தில் கொலை செய்யப்பட்டமை அமெரிக்காவின் இரட்டைவேடத்தன்மையைதோலுரித்து காட்டியது. ஜனநாயக விழுமியங்களை பெருமதிப்புடன் பின்பற்றுதலாக கூறும் அமெரிக்கா கசோக்கியின் படுகொலைக்கு காரணமான சவூதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசனை கண்டிக்க முற்படவில்லை. உலக அபிப்பிரயாயம் சவூதிஅரேபிய அரசுக்கு எதிராக உருப்பெற்ற நிலையில் சவூதிஅரசு விசாரணை நடத்தி பொறுப்பானவர்களைக் குற்றவாளிகளாக இனம் கண்டு மரண தண்டனையும் விதித்துள்ளதாக அறிவித்தாலும் கசோக்கியின் படுகொலை சவூதிக்கு எதிர் காலத்தில் பல சவால்களை உருவாக்கக் கூடும்.
ஐயம்பதிபிள்ளை தர்மகுலசிங்கம்